டைரக்டர்கள் மீது பூமிகா வருத்தம்
|தமிழில் விஜய் ஜோடியாக பத்ரி படத்தில் நடித்து அறிமுகமானவர் பூமிகா. ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல், களவாடிய பொழுதுகள், கொலையுதிர் காலம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். எம்.எஸ்.டோனி, சீதாராமம் படங்களிலும் வருவார். சமீபத்தில் திரைக்கு வந்த உதயநிதியின் கண்ணை நம்பாதே படத்தில் இரு வேடங்களில் நடித்து இருந்தார். இந்தி, தெலுங்கு மொழியிலும் நிறைய படங்களில் நடித்து இருக்கிறார். பூமிகா சினிமாவுக்கு வந்து 23 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில் சினிமா வாழ்க்கை குறித்து பூமிகா அளித்துள்ள பேட்டியில், "படப்பிடிப்பின்போது நான் யாரிடமும் அதிகம் பேசுவது இல்லை. புத்தகங்களை படித்துக்கொண்டு இருப்பேன். இப்போதுகூட அப்படித்தான். புத்தகங்கள் படிக்காத நேரத்தில்கூட படப்பிடிப்பு அரங்கில் அனைவருடனும் கலந்து பேசி உரையாடுவது குறைவு.
தனிமையை நான் மிகவும் விரும்புகிறேன். விதவிதமான கதாபாத்திரத்தில் நடித்து விட்டேன். முழு அளவிலான ஒரு நகைச்சுவை படத்தில் நடிக்க ஆசை உள்ளது. காமெடி கதாபாத்திரத்துக்காக நிறைய ஆண்டுகள் முயற்சி செய்தேன். ஆனால் இதுவரை கிடைக்கவில்லை.
அதிரடி படங்களில் கூட என்னால் நடிக்க முடியும். திகில் படங்களில் நடிக்கவும் விருப்பம் உண்டு. ஆனால் ஏனோ சினிமா இயக்குனர்கள் எனக்கு மென்மையான கேரக்டர்களை மட்டுமே கொடுக்க விரும்புகிறார்கள். இது வருத்தம் அளிக்கிறது'' என்றார்.