'மாமனிதன்' திரைப்படத்தை பாராட்டிய பாரதிராஜா...!
|விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'மாமனிதன்' திரைப்படத்தை இயக்குனர் பாரதிராஜா பாராட்டியுள்ளார்.
சென்னை,
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், வெளியான மாமனிதன் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள இந்த படத்தை, நடிகர் ஆர்கே சுரேஷ் தனது ஸ்டுடியோ 9 நிறுவனத்தின் சார்பாக வெளியிட்டுள்ளார். நேற்று முன்தினம் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் தரப்பில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
முதன்முறையாக இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர். படம் வெளியான அன்று மாமனிதன் படத்தை பார்த்த இயக்குனர் ஷங்கர், இந்த படத்திற்காக விஜய் சேதுபதிக்கு தேசிய விருது கிடைக்கும் என்று வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதேபோன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாமனிதன் படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பாராட்டினார்.
இந்த நிலையில் தற்போது இயக்குனர் இமயம் பாரதிராஜா மாமனிதன் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார். இயக்குனர் சீனு ராமசாமி நேரில் அழைத்துப் பேசிய பாரதிராஜா அவரை தன் மகன் என்று நெகிழ்ச்சியுடன் பாராட்டிப் பேசியுள்ளார்.