நடிகை சமந்தாவிற்கு சிறந்த பெண்மணி விருது
|இந்திய திரைத்துறைக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக சமந்தாவிற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமியின் சார்பில் அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் வருகிற 27-ந் தேதி விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. அதில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தாவிற்கு இந்திய சினிமாவின் மதிப்புமிக்க 'ஆண்டிற்கான சிறந்த பெண்' என்ற விருது வழங்கப்பட உள்ளது.
நடிகை சமந்தா "ஏ மாய சேசவே", "ஈகா", "நீதானே என் பொன்வசந்தம்", "மகாநதி" மற்றும் "சூப்பர் டீலக்ஸ்" போன்ற படங்களில் நடித்ததற்காக புகழ் பெற்றவர். இந்திய திரைத்துறைக்கு பல ஆண்டுகளாக மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ராம் சரண் மற்றும் பாலகிருஷ்ணா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கவுரவ விருதை வழங்குவதற்காக நடிகை சமந்தா நன்றி தெரிவித்துள்ளார். ஒரு கலைஞராகவும், ஒரு பெண்ணாகவும் இந்த விருதை பெறுவது பெருமையாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.