28 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸாகும் 'இந்தியன்' திரைப்படம்
|நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸாகிறது.
பிரபல நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த படம் இந்தியன். 1996 -ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இப்படம் ஒரு விழிப்புணர்வு நிறைந்த அதிரடி படமாகும். இதில் கமல் 'சேனாபதி' என்ற வயதான சுதந்திரப் போராட்ட வீரராக நடித்தார்.
ஊழலுக்கு எதிராக போராடிய சேனாதிபதி இந்தியாவை விட்டு ஓடிப்போய் ஹாங்காங் செல்வதுடன், ஊழல் எப்போதாவது திரும்பினால் திரும்பி வருவேன் என்று மிரட்டுவதுடன் 'இந்தியன்' முதல் பாகம் முடிந்தது.
இந்நிலையில் தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு 'இந்தியன் 2 ' படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. திரைப்பட பணிகள் முடிவடைந்து வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாக தயாராகவுள்ளது. படத்தின் முதல் பாடலான 'பாரா' சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்தியன் முதல் பாகத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ஜூன் 7-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
28 ஆண்டுகளுக்கு பிறகு ரி-ரீலிஸ் செய்யப்படும் இத்திரைப்படத்தை பார்க்க மக்களிடையே ஆர்வம் உருவாகியுள்ளது.