'இரண்டு குழந்தைகளின் அம்மாவாக நடித்ததால்...' - வாணி போஜன்
|படத்தை ரொம்பவும் லவ் பண்ணி எனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்று வாணி போஜன் கூறினார்.
சென்னை,
நீட் தேர்வை மையமாக கொண்டு சுப்புராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அஞ்சாமை. படத்தின் கதாநாயகனாக விதார்த் கதாநாயகியாக வாணி போஜன், கிருத்திக் கணேசன் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற7-ந் தேதி படம் திரைக்கு வர உள்ளது. டிரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனம் படத்தை வெளியிட உள்ளனர். இதையொட்டி சென்னையில் நடந்த விழாவில் நடிகை வாணி போஜன் பேசியதாவது:-
இந்தப் படத்தில் உயிரைக் கொடுத்து நடித்துள்ளேன். படத்தை ரொம்பவும் லவ் பண்ணி எனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இரண்டு குழந்தைகளின் அம்மாவாக படத்தில் நடித்ததால் நிறைய பேர் என்னிடம் இனிவரும் படங்கள் அனைத்தும் குழந்தைகளுக்கு அம்மா என்ற கதாபாத்திரமாகவே உங்களுக்கு வரும் என்று கூறினார்கள்.
ஆனால் படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் இந்த படத்தில் நான் நடிக்காமல் இருந்தால் நான் நடிகையாக இருப்பதில் அர்த்தமில்லாமல் போயிருக்கும். நடித்த படங்களில் இந்த படம் எனக்கு ரொம்ப மன நிறைவு உள்ள படமாக அமைந்துள்ளது. விதார்த் நல்ல நடிகர். ஒவ்வொரு காட்சிகளிலும் அவ்வளவு சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்துவார். ரேவதிபோல் இருக்க ஆசையா? ரம்பா போல் இருக்க ஆசையா? என்று கேட்கிறீர்கள் நான் வாணி போஜனாகவே இருக்க விரும்புகிறேன், என்றார்.