அழகு என்பது ஓர் உணர்வு; சுஷ்மிதா சென் டுவிட்டர் பதிவு
|பிரபஞ்ச அழகியாக சுஷ்மிதா சென் பட்டம் வென்று 28 ஆண்டுகள் ஆன நிலையில் அதனை கொண்டாடும் வகையில் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவை சேர்ந்த சுஷ்மிதா சென் 1994ம் ஆண்டு மே 21ந்தேதி பிரபஞ்ச அழகியாக முடி சூட்டப்பட்டார். அவர் இந்த பட்டம் வென்ற முதல் இந்திய பெண் ஆவார். முடி சூடியதும் ஆனந்த கண்ணீர் வடித்த அவர் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டார்.
இதன்பின்னர் அவர் பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் ரட்சகன் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். முதல்வன் படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார்.
இந்தியா சார்பில் முதன்முறையாக பிரபஞ்ச அழகியாக அவர் பட்டம் வென்றது அப்போது சிறந்த தருணம். அதன்பின்னர் நமக்கு இரண்டு கிரீடங்கள் கிடைத்தன. 2000ம் ஆண்டில் லாரா தத்தா மற்றும் 2021ம் ஆண்டில் ஹர்னாஸ் சந்து ஆகியோர் பிரபஞ்ச அழகியாக தேர்வானார்கள்.
சுஷ்மிதா சென் பிரபஞ்ச அழகி பட்டம் வென்று 28 ஆண்டுகள் கடந்து விட்டன. இதனை கொண்டாடும் வகையில் தனது டுவிட்டரில் அவர் பதிவிட்டு உள்ளார்.
அதில், அழகு என்பது ஓர் உணர்வு. இந்தியா முதன்முறையாக பிரபஞ்ச அழகி பட்டம் வென்று 28 ஆண்டுகள் ஆகி விட்டது. மகிழ்ச்சி. காலம் உருண்டோடுகிறது. அழகு குலையாமல் இருக்கிறது என பதிவிட்டு உள்ளார்.
அவரது பதிவுக்கு பலரும் அவரை பாராட்டியும், புகழ்ந்தும் விமர்சனங்களை பதிவிட்டு உள்ளனர். அவர்களுக்கு சுஷ்மிதா சென் நன்றியும், பதிலும் அளித்துள்ளார்.