ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. நடிகை சுகன்யா எழுதி பாடிய 'ஜெய் ஸ்ரீராம்' பாடல் வைரல்
|அயோத்தியில் பால ராமர் சிலை பிரதிஷ்டை நாளை (திங்கட்கிழமை) 12.20 மணிக்கு நடைபெறுகிறது.
சென்னை,
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் ராமஜென்ம பூமியில், ராமருக்கு பிரமாண்டமான கோவில் கட்டப்பட்டுள்ளது. கலையும், பாரம்பரியமும் கொண்ட இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவும், பால ராமர் சிலை பிரதிஷ்டையும் நாளை (திங்கட்கிழமை) 12.20 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பல முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடிகை சுகன்யா எழுதி பாடிய 'ஜெய் ஸ்ரீராம்' பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பாடலுக்கு அவரே இசையமைத்து உள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 'அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள வேளையில் என்னுடைய சிறு பங்களிப்பாக இந்தப் பாடலை உருவாக்கி உள்ளேன்.
ஸ்ரீராமரின் மகிமை, ராமாயணச் சுருக்கம், அயோத்தி கோயிலை நாம் நேரில் காணும் பாக்கியம் அமைந்திருப்பது உள்ளிட்ட அம்சங்களை இந்தப் பாடலில் வெளிப்படுத்தி உள்ளோம்' என்றார்.
முதலில் ஆடியோ வடிவில் இந்த பாடல் வெளியிடப்பட்டு உள்ளது. விரைவில் வீடியோ வடிவில் இந்த பாடலை வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.