கண்டிப்பாக 'அயலான்-2' வெளியாகும் - நடிகர் சிவகார்த்திகேயன் அறிவிப்பு
|பொங்கலை முன்னிட்டு 'அயலான்' திரைப்படம் நேற்று வெளியானது.
சென்னை,
ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாகியும் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாததால் ஒருவேளை படம் கைவிடப்பட்டதா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்தது. அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இந்த படம் ஜனவரி 12-ந் தேதி வெளியாகும் என அறிவித்து இருந்தது.
அதன்படி பொங்கலை முன்னிட்டு 'அயலான்' திரைப்படம் நேற்று வெளியானது. தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் குவிந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள், ஆர்வமுடன் படத்தை கண்டு ரசித்து வருகின்றனர். படத்தின் வி.எப்.எக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் படத்திற்கு நிகராக உள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அளித்துள்ள பேட்டியில், ''ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் ரஜினியுடன் நான் நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவி உள்ளன. ஆனால் அந்த படத்தில் நடிக்கும்படி இதுவரை எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை.
தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறேன். 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறேன்.
'அயலான்' படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக வரும். அதற்கான திட்டங்கள் உள்ளன. என்னை பொருத்தவரை ஓ.டி.டி. தளங்கள் சாதகமானதாகவே தெரிகிறது. தியேட்டருக்கு பிறகு ஓ.டி.டி.யில் படங்கள் வெளியாகும்போது இன்னும் நிறைய பார்வையாளர்கள் படத்துக்கு கிடைக்கிறார்கள்' என்று தெரிவித்தார்.