வாரிசு நடிகர்களுக்கு விருது வழங்குவதா? நடிகை கங்கனா ரணாவத் கண்டனம்
|மும்பையில் தாதா சாகேப் பால்கே இன்டர்நேஷனல் அமைப்பு சார்பில் நடந்த விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருது ரன்பீர் கபூருக்கும், சிறந்த நடிகைக்கான விருது அவரது மனைவி அலியாபட்டுக்கும் வழங்கப்பட்டது. இதற்கு நடிகை கங்கனா ரணாவத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழில் 'தாம்தூம்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி 'தலைவி' படத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ள கங்கனா ரணாவத், தற்போது 'சந்திரமுகி' 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
இந்தி பட உலகில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கத்துக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் மும்பையில் தாதா சாகேப் பால்கே இன்டர்நேஷனல் அமைப்பு சார்பில் நடந்த விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருது ரன்பீர் கபூருக்கும், சிறந்த நடிகைக்கான விருது அவரது மனைவி அலியாபட்டுக்கும் வழங்கப்பட்டது.
சினிமா வாரிசுகள் என்பதால் இந்த விருது அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளதாக கங்கனா சாடி உள்ளார். "விருதுகள் பெறும் தகுதி இவர்களுக்கு மட்டும்தான் இருக்கிறதா. சிறந்த நடிகருக்கான விருது 'காந்தாரா' நடிகர் ரிஷப் ஷெட்டிக்கும், நடிகைக்கான விருது மிருணாள் தாகூருக்கும், சிறந்த படத்துக்கான விருது 'காந்தாரா'வுக்கும், சிறந்த இயக்குனருக்கான விருது ராஜமவுலிக்கும் வழங்கி இருக்க வேண்டும்'' என்று டுவிட்டரில் அவர் தெரிவித்து உள்ளார்.
"இந்தி திரை உலகில் வாரிசுகள் ஆதிக்கம் ஓயவில்லை. சினிமா பின்னணில் வந்தவர்களுக்கு விருது கொடுத்து பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள்'' என்றும் கண்டித்து உள்ளார்.