'ரசல் இந்தியில் பாடுவதை என்னால் நம்பமுடியவில்லை' - அவிகா கோர்
|இந்தியில் ரசல் பாடுவதை என்னால் நம்பமுடியவில்லை என்று அவிகா கோர் கூறினார்.
மும்பை,
பிரபல நடிகை அவிகா கோர். இவரும் பிரபல கிரிக்கெட் வீரர் ரசலும் இணைந்து முதல்முறையாக பாலிவுட் பாடல் ஒன்றில் நடனம் ஆடியுள்ளனர். ரசலும் நடிகை அவிகா கோரும் இணைந்து ஆடியுள்ள "லட்கி து கமால் கி" என்ற இந்தி பாடல் கடந்த 9-ம் தேதி வெளியானது. இப்பாடலை ரசல் மற்றும் மேலும் சிலர் பாடினர்.
இப்பாடல் வெளியாகி வைரலானது. மேலும், ரசிகர்களை ஆச்சரியமடைய செய்தது. இந்த பாடலை பலாஷ் முச்சல் இசையமைத்து, இயக்கி இருக்கி இருக்கிறார். கிரிஷ் மற்றும் வினித் ஜெயின் இப்பாடலை தயாரித்தனர்.
இந்நிலையில், இப்பாடலில் நடனமாடியது குறித்து அவிகா கோர் கூறினார். அவர் கூறியதாவது,
பலாஷ் முச்சல் எனது நண்பர். அவர் என்னிடம் ரசலை வைத்து ஒரு பாடலை இயக்க உள்ளதாக கூறினார். ரசல் இந்தியில் பாடுவதை என்னால் நம்பமுடியவில்லை. அந்த பாடலை கேட்டபோது, எப்படியாவது இதில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அப்போது பலாஷ் முச்சலிடம் நானும் அதில் ஒரு பகுதியாக இருக்க முடியுமா? என்று மீண்டும் மீண்டும் கேட்டேன்.
நான் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்கள் சீரியஸாகவே இருக்கும். இதனால் தற்போது ரசலுடன் இந்த பாடலில் நடனமாடியது புதுவிதமாக இருந்தது. இதில் எனக்கு கவர்ச்சி புடவை அணிந்து, எனது வேறொரு பக்கத்தை ஆராய வாய்ப்பு கிடைத்தது. எனக்கு அது சந்தோஷமாக இருந்தது. ஏனெனில் நடனமாடுவது எனக்கு பிடிக்கும். இவ்வாறு கூறினார்.