< Back
சினிமா செய்திகள்
அவதார் படத்தின் மூன்றாம் பாகம்: டைட்டில் என்ன தெரியுமா?
சினிமா செய்திகள்

'அவதார்' படத்தின் மூன்றாம் பாகம்: டைட்டில் என்ன தெரியுமா?

தினத்தந்தி
|
10 Aug 2024 12:39 PM IST

'அவதார்' படத்தின் மூன்றாம் பாகத்திற்கான டைட்டிலை இயக்குனர் ஜேம் கேமரூன் அறிவித்துள்ளார்.

கலிபோர்னியா,

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 'அவதார்' படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. படத்தில் இடம்பெற்று இருந்த பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. வசூலிலும் சாதனை நிகழ்த்தி 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது. 13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 'அவதார்: தி வே ஆப் வாட்டர்' என்ற பெயரில் தயாரானது.

இந்தப்படம் ஆங்கிலம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியானது. 'அவதார்: தி வே ஆப் வாட்டர்', சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் இது ஒன்றாகும்.

இந்தநிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவதார் படத்தின் மூன்றாம் பாகத்திற்கான தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன், நடிகர்களான ஜோ சல்டானா மற்றும் சாம் வொர்திங்டன் முன்னிலையில் இந்தபடத்தின் தலைப்பை வெளியிட்டார். அதன்படி, இந்த படத்திற்கு "அவதார்: பயர் அண்ட் ஆஷ்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கேட் வின்ஸ்லெட், கிளிப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், எடி பால்கோ மற்றும் திலீப் ராவ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் இப்படம் குறித்து இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் கூறியதாவது, "நீங்கள் இதுவரை பார்த்திராத பல பண்டோராவைப் பார்ப்பீர்கள், இதில் இடம் பெற்றுள்ள காட்சிகள் கண்களுக்கு விருந்தளிக்கும், ஆனால் இது முன்பை விட அதிக உணர்ச்சிகரமான காட்சிகளை கொண்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்