ஏ.வி.ராஜு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் - திரிஷா நோட்டீஸ்
|24 மணிநேரத்துக்குள் முன்னணி செய்தி நிறுவனங்கள் வாயிலாக ஏ.வி.ராஜு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை,
சேலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் அளித்த பேட்டியில், கடந்த 2017-ம் ஆண்டு கூவத்தூர் தனியார் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்தபோது, நடிகைகள் அழைத்து வரப்பட்டதாகக் கூறியதுடன், நடிகை திரிஷாவின் பெயரையும் வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தார்.
ஏ.வி.ராஜுவின் இந்த பேச்சு கடுமையான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. சினிமா பிரபலங்கள் பலரும் இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து இயக்குனர் சேரன், நடிகர் விஷால் மற்றும் திரைத்துறையினரிடம் மன்னிப்பு கேட்பதாக ஏ.வி.ராஜூ தெரிவித்தார்.
இந்த நிலையில், தன்னைப்பற்றி அவதூறாக பேசிய அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி திரிஷா அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீசில், 24 மணிநேரத்துக்குள் ஏ.வி.ராஜு முன்னணி செய்தி நிறுவனங்கள் வாயிலாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் யூடியூப் சேனல்கள் மூலம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே வெளியான அவதூறு வீடியோக்களை அனைத்து தளங்களில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.