விருது வழங்கும் விழாவில் ருசிகரம்: ஷாருக்கான் காலில் விழுந்த அட்லி - நெகிழ்ந்த ரசிகர்கள்
|பெரிய ஹிட் படங்கள் ஏதும் இல்லாமல் தவித்து வந்த பாலிவுட் சினிமாவுக்கு ஜவான் படம் புத்துயிர் கொடுத்தது.
மும்பை,
கடந்த ஆண்டில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ஜவான். நயன்தாரா, விக்னேஷ் சிவன், தீபிகா படுகோனே உள்பட பலரும் படத்தில் நடித்திருந்தார்கள். நீண்ட காலமாக நல்ல சினிமா இல்லாமல் துவண்டு கிடந்த பாலிவுட் சினிமாவை தூக்கிய நிறுத்திய படமாக ஜவான் இருந்தது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு ஜவான் திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.
இதையடுத்து இந்தப் படம் தற்போது பல்வேறு பிரிவுகளில், பல விருதுகளை குவித்து வருகிறது. இதைத்தொடர்ந்து பிரபல திரைப்பட விருதுகளான ஜீ சினிமா விருது 2024 இல், ஷாருக்கானின் ஜவான் படத்துக்கு சிறந்த இயக்குநருக்கான விருது கிடைத்தது.
இந்த விருது குறித்து அறிவிக்கப்பட்டதுடன் பலத்த கரகோஷங்கள் எழும்பின. அப்போது ஷாருக்கான் அருகே அமர்ந்திருந்த ஜவான் படத்தின் இயக்குநர் அட்லி, உடனடியாக எழுந்து ஷாருக் காலில் விழுந்து ஆசி பெற்றார். உடனடியாக அட்லியின் தோல்களை தூக்கி எழுப்பிய ஷாருக்கான், அவரை கட்டி அணைத்து, முத்தமிட்டு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த சம்பவம் விருது நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்களை நெகிழ்ச்சியடைய விதமாக இருந்தது.
சிறந்த இயக்குநருக்கான விருதை பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியிடமிருந்து பெற்றார் இயக்குநர் அட்லி. விருதை பெற்றபின் அவருடன் சிறிது நேரம் பேசினார். ஏற்கனவே, பிலிம்பேர் விருதுகளில் ஜவான் திரைப்படத்துக்கு சிறந்த ஆக்ஷன், சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் விருதுகளை பெற்றுள்ளது.ஜவான் திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகலாம் என்று படத்தின் வெற்றிக்கு பிறகு தெரிவிக்கப்பட்டது.
ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் ஜவான் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டான இந்த படம் ரூ. 1160 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிசில் வசூலித்தது. படத்தில் ஹீரோயினாக நயன்தாராவும், நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருப்பார்கள்.
ஷாருக்கான் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்தி அசத்தினார். தந்தை ஷாருக்கானின் மனைவி வேடத்தில் தீபிகா படுகோனே நடித்திருப்பார். பிரியாமணி, சான்யா மல்கோத்ரா, யோகிபாபு உள்பட பலரும் படத்தில் நடித்து இருந்தனர்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த தாதா சாஹப் பால்கே சர்வதேச திரைப்பட விருது 2024-ல், ஜவான் படத்துக்காக சிறந்த நடிகர் விருதை வென்றார் ஷாருக்கான். ஜவான் படம் தொடர்ந்து பல்வேறு விருதுகளை வென்று வருகிறது. பெரிய ஹிட் படங்கள் ஏதும் இல்லாமல் தவித்து வந்த பாலிவுட் சினிமாவுக்கு ஜவான் படம் புத்துயிர் கொடுத்தது.
ஜவான் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாகவும் பாலிவுட் படம் ஒன்றை தயாரித்து வருகிறார் இயக்குநர் அட்லி. ஆக்ஷன் எண்டர்டெயினர் பாணியில் உருவாகும் இந்த படத்துக்கு பேபி ஜான் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிக கப்பி ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
காலிஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் மே 31ஆம் தேதி திரைக்கு வருகிறது. இயக்குநர் அட்லி மற்றும் அவரது மனைவி பிரியாவின் ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், ஜியோ ஸ்டுடியோஸ், சினி1 ஸ்டுடியோ இணைந்து படத்தை தயாரிக்கிறது.