'டிஎன்ஏ' படத்தில் இரண்டு புதிய தோற்றங்களில் நடிக்கும் அதர்வா
|‘டிஎன்ஏ'படத்தில் அதர்வா, நிமிஷா கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்கும் என இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் கூறியுள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியான 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் வெங்கடேசன். அதன் பின்னர் 'மான்ஸ்டர்', 'பர்ஹானா' போன்ற திரைப்படங்களை இயக்கி வரவேற்பை பெற்றார்.
அதைத்தொடர்ந்து அடுத்ததாக அதர்வா நடிப்பில் 'டிஎன்ஏ' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சித்தா படத்தில் புகழ் பெற்ற நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். நிமிஷா சஜயன் மலையாளத்தில் பிரபல நடிகையாக உள்ளார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் தலைப்பு கடந்த ஆண்டு வெளிவந்த நிலையில். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதர்வா பிறந்தநாளன்று வெளியானது.
நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், "இந்தப் படத்துக்கு நிமிஷா மற்றும் அதர்வா தேர்ந்தெடுக்கக் காரணம் கதைதான். அதுதான் சுவாரஸ்யமாகவும் இருந்தது. இந்தப் படத்தில் அதர்வா 2, 3 புதிய தோற்றங்களில் வருவார். இதற்கு முன்பு பார்க்காத அதர்வாவை பார்க்கலாம். நடிகை நிமிஷாவும் 2 புதிய தோற்றங்களில் வருவார். நாங்கள் புதியதாக ஒன்றினை முயற்சித்துள்ளோம். அது நிச்சயமாக புத்துணர்வாக இருக்கும். இதற்கு பார்வையாளர்கள் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.