< Back
சினிமா செய்திகள்
அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் மன்னிப்பு கேட்க வேண்டும் - ஏ.ஆர்.ரகுமான் நோட்டீஸ்
சினிமா செய்திகள்

'அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் மன்னிப்பு கேட்க வேண்டும்' - ஏ.ஆர்.ரகுமான் நோட்டீஸ்

தினத்தந்தி
|
3 Oct 2023 9:51 PM IST

அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை,

இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் அமைப்பு செயலாளர் கே.விநாயக் செந்தில், பொருளாளர் கே.விவேகானந்தா சுப்பிரமணிய நாதன் ஆகியோர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்

அந்த மனுவில், "சென்னையில் கடந்த 2018-ம் ஆண்டு தேசிய அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாட்டை நடத்த திட்டமிட்டோம். இதில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியை நடத்துவதற்காக அவரை அணுகினோம். இந்த இசை நிகழ்ச்சிக்காக ரூ.29.5 லட்சம் முன்தொகையாக கொடுத்தோம். ஆனால் நிகழ்ச்சி நடத்தவும், இட அனுமதியும் அரசிடம் இருந்து கிடைக்கவில்லை.

எனவே, முன்தொகையை திரும்ப தரும்படி அவருக்கு கடிதம் அனுப்பினோம். ஏ.ஆர்.ரகுமான் அதற்கு ஒத்துக்கொண்டு, அந்த தொகைக்கான பின் தேதியிட்ட ஒரு காசோலையை எங்களுக்கு கொடுத்தார். ஆனால், சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் இல்லையென அந்த காசோலை திரும்ப வந்துவிட்டது.

நாங்கள் கொடுத்த பணத்தை தரும்படி கடந்த 5 ஆண்டுகளாக ஏ.ஆர்.ரகுமானிடம் தொடர்ந்து கேட்டு வருகிறோம். ஆனால், இதுவரை எங்கள் பணம் திருப்பி தரப்படவில்லை. எனவே, ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது செயலாளர் செந்தில் வேலவன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்களது பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டுக்கு ஏ.ஆர்.ரகுமான் தரப்பினர் மறுப்பு தெரிவித்தனர். இதுகுறித்து அவரது செயலாளர் செந்தில் வேலவன் வெளியிட்ட அறிக்கையில், "2018-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி மற்றும் வேறு சில நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக அவரின் பெயரில் ரூ.25 லட்சமும், இதர கலை நிகழ்ச்சிக்காக ரூ.25 லட்சமும் என 2 காசோலைகளை அவர்கள் வழங்கினர். அப்போது போடப்பட்ட உடன்படிக்கையில் 'நீங்களாகவே நிகழ்ச்சிகளை நிறுத்தினால் அல்லது ரத்து செய்தால் கலைஞர்களுக்கு வழங்கப்படும் முன் பணம் திரும்பி தரப்படாது', என குறிப்பிட்டு இருந்தோம்.

அதன் அடிப்படையில் நிகழ்ச்சியை அவர்கள் ரத்து செய்தால் முன்பணம் திரும்பி வழங்க தேவையில்லை என்ற நிபந்தனையோடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிலையில் இசை நிகழ்ச்சியை அந்த அமைப்பால் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே அவர்கள் இசை நிகழ்ச்சியை ரத்து செய்தனர். இருந்த போதிலும் ஏ.ஆர்.ரகுமான் பெயரில் வழங்கப்பட்ட ரூ.25 லட்சம் காசோலை அந்த அமைப்புக்கு திருப்பி வழங்கப்பட்டுவிட்டது.

அந்த அமைப்பினரே இசை நிகழ்ச்சியை ரத்து செய்த நிலையிலும் ஏ.ஆர்.ரகுமான் பெயரில் வழங்கப்பட்ட காசோலை திருப்பி வழங்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் தேவையில்லாமல் ஏ.ஆர்.ரகுமானின் பெயரை கெடுக்கும் நோக்கில் இந்த புகாரில் அவரது பெயரை இணைத்துள்ளனர். எங்கள் மீது கொடுக்கப்பட்ட புகாரை சட்டப்படி எதிர்கொள்வோம்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதற்காக அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் பதில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூறிய குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் தேவையில்லாமல் ரகுமானின் பெயர் இழுக்கப்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சை நிபுணர்கள் அளித்த நோட்டீஸை 3 நாட்களுக்குள் திரும்பப்பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதோடு ரகுமானின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், 10 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும், தவறினால் சட்ட ரீதியாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


மேலும் செய்திகள்