< Back
சினிமா செய்திகள்
தனுஷ் இயக்கும் இட்லி கடை திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை - அசோக் செல்வன் விளக்கம்
சினிமா செய்திகள்

தனுஷ் இயக்கும் 'இட்லி கடை' திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை - அசோக் செல்வன் விளக்கம்

தினத்தந்தி
|
25 Sept 2024 12:53 AM IST

தனுஷ் இயக்கும் ‘இட்லி கடை’ திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை என்று நடிகர் அசோக் செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகி வருவதாக அறிவிப்பு வெளியானது. இது தனுஷின் 52வது திரைப்படமாகும். தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அருண்விஜய் வில்லனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் ராஜ்கிரண் ஆகியோர் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கின்றனர். 'திருச்சிற்றம்பலம்' படத்தின் நாயகியான நித்யாமேனனுடன் தனுஷ் மீண்டும் இணைகிறார் என்கிற தகவல்கள் ஏற்கனவே வெளியாகின.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான அசோக் செல்வன், கடைசியாக புளு ஸ்டார் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜனவரியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் 'பொன் ஒன்று கண்டேன்' படம் நேரடியாக ஓ.டி.டியில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

அசோக் செல்வன் தற்போது நோஹா ஆபிரஹாம் இயக்கத்தில் 'கேங்க்ஸ்' என்ற வெப் தொடரில் நடிக்கிறார். இதையடுத்து அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில் 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் கடந்த மே மாதம் வெளியாகி கவனம் பெற்றது. இப்படி தனது படங்களில் பிஸியாக நடித்து வரும் அசோக் செல்வன், தனுஷ் இயக்கி நடிக்கும் 'இட்லி கடை' படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. இதில் தனுஷூக்கு சகோதரராக நடிப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் அசோக் செல்வன் இட்லி கடை படத்தில் நடிக்கவில்லை என தற்போது தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரின் எக்ஸ் பதிவில், "நான் தனுஷின் தீவிர ரசிகன். இனி வரும் காலங்களில் அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். ஆனால், நான் இட்லி கடை படத்தில் நடிக்கவில்லை. இதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்