< Back
சினிமா செய்திகள்
வழக்கம் போல இது வெற்றிமாறன் படைப்பு - விடுதலை படத்தை பாராட்டிய திருமாவளவன்
சினிமா செய்திகள்

வழக்கம் போல இது வெற்றிமாறன் படைப்பு - 'விடுதலை' படத்தை பாராட்டிய திருமாவளவன்

தினத்தந்தி
|
2 April 2023 4:38 AM IST

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 'விடுதலை' திரைப்படத்தை பாராட்டி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள 'விடுதலை' திரைப்படம், நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த படத்தை பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் 'விடுதலை' திரைப்படத்தை பாராட்டி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், "தோழர் வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம் பார்த்தேன். அரசு -அதிகாரம் -ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்களை விவரிக்கிறது.

அரசு என்றால் அதிகாரம்; அதிகாரம் என்றால் ஆயுதம்; ஆயுதம் என்றால் ஆணவம்; ஆணவம் என்றால் எளிய மக்களின் குருதியைச் சுவைக்கும் குரூரமான ஒடுக்குமுறை என்பதை அங்குலம் அங்குலமாக அம்பலப்படுத்துகிறது. மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயுதம் தாங்கிய குழு எவ்வாறு ஆளும் வர்க்கத்துடன் எதிர்வினையாற்றுகிறது என்பதையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஆழமான உரையாடலுக்கு உட்படுத்துகிறது.

தோழர் வெற்றி மாறன் ஒரு படைப்பாளராக மட்டுமின்றி வர்க்க முரண்களை விவரிக்கும் பேராசிரியராகவும் வெளிப்படுகிறார். மக்களை அமைப்பாக்குவதும் அரசியல்படுத்துவதும் இன்றியமையாத ஒரு தேவை என்பதை உணர்த்துகிறார். வழக்கம் போல இது 'வெற்றிமாறன் படைப்பு' என முத்திரை பதித்துள்ளார். வெல்க_விடுதலை!" என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்