ஒரு நடிகனாக 'கொட்டுக்காளி' எனக்கு சிறந்த படம் - நடிகர் சூரி
|நடிகர் சூரி 'கொட்டுக்காளி' படம் குறித்த தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
சென்னை,
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் நடிகராகவும், பாடகராகவும், பாடல் ஆசிரியராகவும் வலம் வருகிறார். அத்துடன் இவர் தயாரிப்பாளராகவும் உருவெடுத்து பல படங்களை தனது எஸ்கே புரோடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார். அந்த வகையில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'கொட்டுக்காளி' எனும் திரைப்படத்தையும் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். இந்த படத்தை 'கூழாங்கல்' படத்தின் இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் இயக்கியுள்ளார்.
இதில் சூரியுடன் இணைந்து அன்னா பென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேசமயம் இந்த படமானது ரிலீஸுக்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடம் பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்தநிலையில் 'கொட்டுக்காளி' படம் பற்றி நடிகர் கூறியது, "காமெடியனாக இருந்து கதையின் நாயகனாக மாறியிருக்கிறேன். அதுக்கு ரசிகர்கள்தான் காரணம். ஒரு நடிகனாக, 'கொட்டுக்காளி' எனக்கு சிறந்த கதைக்களம். இப்படிப்பட்ட படங்களில் தான் நடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இந்த படம் ரசிகர்கள் அனைவரும் ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும்", என்று கூறினார்.
மேலும் தமிழில் படத்தில் முதல்முறையாக அறிமுகமாகும் அன்னா பென் கூறியது, இந்த படத்தில் நான் பிடிவாதக்காரப் பெண்ணாக நடித்துள்ளேன், இயக்குனர் கதை சொல்லும் போது எல்லா கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருந்ததைப் பார்த்தேன். இந்த படத்தில் எனக்கு அதிக வசனம் இருக்காது, ஆனால் இப்படம் எனக்கு புதிதாகவும் சவாலானதாகவும் இருந்தது, என்று கூறினார்.
இந்தநிலையில் இப்படம் வருகிற ஆகஸ்ட் 23-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.