வணங்கான் படப்பிடிப்பு நிறைவு! வெளியாகிய புகைப்படங்கள்
|இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகும் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.
சென்னை,
1995-ம் ஆண்டில் வெளியான 'முறை மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அருண் விஜய். இவர் நடிப்பில் வெளியான 'பாண்டவர் பூமி' இவரின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்திய படமாக அமைந்தது. சிறிய இடைவெளிக்கு பிறகு 'என்னை அறிந்தால்' படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்தார். இவர் தடையற தாக்க, குற்றம் 23, தடம், சினம், யானை, போன்ற படங்களில் நடித்து ஆக்சன் ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான 'மிஷன் - சாப்டர் 1' படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இவர் தற்போது இயக்குநர் பாலா இயக்கத்தில் 'வணங்கான்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரோஷினி பிரகாஷ் , சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முதலில் இந்த படத்தில் நடிகர் சூர்யா நடிப்பதாக இருந்தது பின்னர் சில காரணங்களால் அவர் இந்த படத்தில் இருந்து விலகினார்.
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த போஸ்டரில் அருண் விஜய் ஒரு கையில் பெரியார் மற்றும் மற்றொரு கையில் விநாயகர் சிலைகளை வைத்து இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது 'வணங்கான்' என்ற படத்தை இயக்கியுள்ளார். வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் 'பி ஸ்டூடியோஸ்' தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.
பெரும்பாலான படப்பிடிப்பு கன்னியாகுமரி, திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது. ஏற்கெனவே படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
தற்போது வணங்கான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. விரைவில் வெளியீடு குறித்த தகவல் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.