'டிமான்ட்டி காலனி' படத்தின் 3 மற்றும் 4ம் பாகத்தின் கதை தயார் - நடிகர் அருள்நிதி
|'டிமான்ட்டி காலனி' படத்தின் 3 மற்றும் 4ம் பாகத்தின் கதை தயாராக உள்ளதாக நடிகர் அருள்நிதி கூறியுள்ளார்.
சென்னை,
அருள்நிதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் வம்சம், மௌனகுரு, இரவுக்கு ஆயிரம் கண்கள், டைரி, கழுவேத்தி மூர்க்கன் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இதற்கிடையில் கடந்த 2015-ம் ஆண்டு அருள்நிதி, டிமான்ட்டி காலனி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து 'டிமான்ட்டி காலனி ' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது.
அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள 'டிமான்ட்டி காலனி 2' படத்தில் அருள்நிதி தவிர பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பி டி ஜி யுனிவர்சல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில் ஹரிஷ் கண்ணன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். சாம் சி எஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஹாரர் கதை களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர், டிரெய்லர் அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக தூண்டியுள்ளது.இந்த படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்நிலையில் அருள்நிதி, டிமான்ட்டி காலனி மூன்றாம் பாகம் மற்றும் நான்காம் பாகம் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.
அவர் கூறியதாவது, "டிமான்ட்டி காலனி 4 வரைக்கும் கதை தயாராக இருக்கிறது. டிமான்ட்டி காலனி 2 படத்தின் வெற்றியை பொறுத்து இதன் மூன்றாம் பாகம் உருவாக்கப்படும். டிமான்ட்டி காலனி 2 படத்தை உருவாக்க முதலில் திட்டமிட்டோம். அதை அஜய் ஞானமுத்துவின் நண்பர்களை வைத்து உருவாக்குவோம் என்ற போது, மற்ற அனைவரும் இந்த படத்தை அஜய் ஞானமுத்துவே இயக்கினால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். அதன் பிறகு மாற்றப்பட்டது. டிமான்ட்டி காலனி முதல் பாகத்தில் ஹீரோ இறந்து விடுவார். அதிலிருந்து தான் இரண்டாம் பாகம் தொடர்பு படுத்தப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.