< Back
சினிமா செய்திகள்
கலைஞர்கள் திராவிடக் கழகத்தை பின் தொடர வேண்டும் - பாடல் வெளியீட்டு விழாவில் ஆர்.கே.செல்வமணி பேச்சு
சினிமா செய்திகள்

"கலைஞர்கள் திராவிடக் கழகத்தை பின் தொடர வேண்டும்" - பாடல் வெளியீட்டு விழாவில் ஆர்.கே.செல்வமணி பேச்சு

தினத்தந்தி
|
24 Feb 2024 1:09 PM IST

படத்தின் பாடல்களையோ, காட்சிகளையோ திரையிடக்கூடாது என்று நெருக்கடி கொடுத்ததாக ‘கற்பு பூமி’ திரைப்பட இயக்குநர் தெரிவித்தார்.

சென்னை,

நேசமுரளி இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் 'கற்பு பூமி'. முன்னணி நடிகர் நடிகைகள் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் கதை பொள்ளாச்சி சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இப்படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்வு நேற்று சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்.

அந்த நிகழ்வில் பேசிய படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் நேசமுரளி, "கற்பு பூமி படம் எதைப் பற்றியது என்றால் எல்லோருக்கும் தெரியும் பொள்ளாச்சியில் என்ன நடந்தது என்று. எல்லா செய்தித்தாள்களிலும் படித்த செய்திகளை வைத்துத்தான் நான் இந்தக் கதையை உருவாக்கி இருந்தேன். இந்த படம் துவங்கியதில் இருந்தே நெருக்கடிதான். இன்று கூட பாடல்களையோ படத்தின் காட்சிகளையோ திரையிடக்கூடாது என்று அவ்வளவு நெருக்கடி கொடுக்கிறார்கள்.

பொள்ளாச்சிக்கே சென்று மூன்று மாதங்கள் தங்கி இருந்தேன். அப்போது அறிந்து கொண்ட ஒரு சம்பவம்தான் இப்படம். இது போன்ற செய்திகள் எல்லாம் பெரும்பாலும் வெளியில் வரவில்லை. நான் இந்த சம்பவங்கள் எல்லாவற்றிற்கும் ஆதாரம் இருக்கிறது என்று சொல்கிறேன். சரி அடுத்து என்ன என்று கேட்டால் பொள்ளாச்சி என்கின்ற டைட்டிலை தூக்குங்கள் என்கிறார்கள். பிரச்சினை நடந்த ஊரின் பெயரை எப்படி மாற்றுவது என்று நான் வாதிட்டுப் பார்க்கின்றேன். அவர்கள் யாரும் என் வாதத்தை கேட்கும் மனநிலையில் கூட இல்லை.

எங்கு பார்த்தாலும் பாலியல் பிரச்சினைகள் தலைவிரித்து ஆடுகின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஏதாவது ஒரு நாள் பத்திரிகையிலோ டி.வி.யிலோ இது போன்ற செய்திகள் வரும். ஆனால் தற்போது அது போன்ற செய்தி இல்லாத நாளே இல்லை எனலாம்.

இப்படத்திற்கு நான் இயக்குநர் மட்டும் இல்லை தயாரிப்பாளரும் கூட என்பதால் படத்தை எப்படியாவது ரீலிஸ் செய்துவிட வேண்டும் என முடிவு செய்து, அவர்கள் சொன்ன 109 கட்-களுக்கு உடன்பட்டு, எண்ட் கார்டை தூக்கி, டைட்டிலை பொள்ளாச்சி என்று வைக்காமல் மாற்றி, யூனியனில் மற்றொரு டைட்டிலை ரிஜிஸ்டர் செய்து, மீண்டும் சென்சார் சர்டிபிகேஷனுக்கு விண்ணப்பித்தேன்.

என்னுடைய கதைகள் எல்லாமே பெண்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் கதைகள்தான். என் அடுத்த படமும் பாலியல் பிரச்சினை சார்ந்ததுதான். இயக்குநர் சங்கத்தில் அய்யா செல்வமணி சார் அவர்கள் 2,500 கதைகளைக் கேட்டு அதில் 52 கதைகளை படமாக்க தேர்வு செய்து வைத்திருக்கிறார்கள். அதில் என்னுடைய கதையும் ஒன்று. அதில் 10 கதைகளை அய்யா ஐசரி கணேஷ் அவர்கள் தயாரிப்பதாக கூறி இருக்கிறார்கள்" என்று அவர் கூறினார்.

இதனையடுத்து பேசிய இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, "இயக்குநர் நேசமணியைப் பற்றிப் பேசியே ஆக வேண்டும். பெரும் போராட்டங்களுக்கு நடுவில்தான் அவர் படங்களை எடுக்கிறார். ஆனால் அந்தப் படங்கள் வெளிவர முடியாத படங்களாகவே அமைந்துவிடுகின்றன. இந்த தருணத்தில் நாம் அனைவரும் அவருக்கு ஆறுதலாக இருப்போம். இந்தப் படத்தில் ஒரு காதல் பாடல், ஒரு குத்துப் பாடல், பாரதி ஐயாவின் பாடல் ஒன்று இடம் பெற்றிருக்கிறது. இரண்டு புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்" என்று அவர் கூறினார்.

அடுத்து பேசிய தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, "இந்த அராஜகத்திற்கு முதலில் பலியான இயக்குநர் நான் தான். அன்று சற்று காம்ப்ரமைஸ் ஆகி சென்றதால் என் படம் வெளியானது. ஒரு வேளை அன்று விடாப்பிடியாக போராடி இருந்தால் இன்று இவர்கள் எல்லாம் பாதிக்கப்பட்டு இருக்கமாட்டார்களோ என்னவோ?

இந்த விஷயத்தில் கலைஞர்கள் திராவிடக் கழகத்தைத்தான் பின் தொடர வேண்டும் என்று சொல்வேன். கெடுபிடிகள் இருந்தாலும் தங்கள் படங்களின் மூலம் கருத்துகளை பரப்பி ஆட்சிக் கட்டிலுக்கு வந்த திராவிடக் கழகத்தைத்தான் கலைஞர்கள் பின்பற்ற வேண்டும். அதே நேரம் அதிகாரத்திலிருப்பவர்கள் அத்தனை பேரையும் ஒரே நேரத்தில் பகைத்துக் கொள்வது புத்திசாலித்தனம் அல்ல.

ஒரு காலத்தில் மக்களைக் காக்கவே போலீசும் அதிகாரமும் இருந்தன. ஆனால் தற்போது போலீசும் அதிகாரமும், கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றவே போராடிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலை மாற வேண்டும்" என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்