'ஆர்ட்டிகிள் 370' திரைப்படத்திற்கு வரி விலக்கு அளித்தது மத்தியப் பிரதேச அரசு
|ஆர்ட்டிகிள் 370 திரைப்பட்டத்தில் யாமி கவுதம், பிரியாமணி நடித்துள்ளனர்.
போபால்,
ஆதித்யா ஜம்பாலே இயக்கத்தில் யாமி கவுதம், பிரியாமணி நடித்துள்ள 'ஆர்ட்டிகிள் 370' படம் கடந்த மாதம் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது குறித்த திரைப்படமாகும்.
இப்படம் வெளியாவதற்கு முன்பு ஜம்மு-காஷ்மீரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "மக்கள் உண்மையான தகவல்களை தெரிந்துகொள்ள இப்படம் உதவும்" என்று பாராட்டியிருந்தார். இப்படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இடம்பெற்றதாக கூறி வளைகுடா நாடுகளில் இப்படம் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்திற்கு மத்தியப் பிரதேச அரசு வரி விலக்கு அறிவித்துள்ளது. இது குறித்து அம்மாநில முதல்-மந்திரி மோகன் யாதவ் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஆர்ட்டிகிள் 370 திரைப்படத்தை மாநிலத்தின் குடிமக்கள் அறிந்து கொள்வதற்காக மத்தியப் பிரதேசத்தில் இப்படத்திற்கு வரியில்லா படமாக்க முடிவு செய்துள்ளோம். ஆர்ட்டிகிள் 370 சட்டத்தை நீக்கியதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் மகத்தான வளர்ச்சி வாய்ப்புகளுக்கான கதவுகளை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் கடந்த கால மற்றும் தற்போதைய சூழ்நிலைகளை நெருக்கமாக புரிந்து கொள்ள இந்த படம் ஒரு வாய்ப்பை அளிக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடி அரசு, ஆகஸ்ட் 5, 2019 அன்று, ஆர்ட்டிகிள் 370 ஐ ரத்து செய்தது, இதன் மூலம் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை முடிவுக்கு கொண்டு வந்து, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது குறிப்பிடத்தக்கது.