கோலாகலமாக நடந்த அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா - உமாபதி நிச்சயதார்த்தம்: வைரலாகும் புகைப்படங்கள்...!
|நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை திருமணம் செய்துகொள்ள உள்ளார்.
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா 'பட்டத்து யானை' என்ற படத்தில் விஷால் ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ், கன்னட மொழிகளில் வெளியான 'சொல்லி விடவா' படத்திலும் நடித்து இருந்தார்.
குணசித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி அதாகப்பட்டது மகாஜனங்களே, மணியார் குடும்பம், தண்ணி வண்டி, சேரன் இயக்கிய திருமணம் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். 'ராஜாகிளி' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
அர்ஜுன் தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சிக்காக தென் ஆப்பிரிக்கா சென்றபோது நடிகை ஐஸ்வர்யாவுக்கும், உமாபதிக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்களின் திருமணத்துக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.
இந்நிலையில் அர்ஜுன் சென்னையில் கட்டியுள்ள ஆஞ்சிநேயர் கோவிலில் நடிகை ஐஸ்வர்யாவுக்கும், உமாபதிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடந்து முடிந்துள்ளது. இருவீட்டு குடும்பத்தை சேர்ந்த முக்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இதில் கலந்து கொண்டனர். மேலும் இவர்களின் திருமணம் தை மாதம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.