< Back
சினிமா செய்திகள்
நடிகர் அர்ஜுன் மகள் திருமணம்... முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் அழைப்பு
சினிமா செய்திகள்

நடிகர் அர்ஜுன் மகள் திருமணம்... முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் அழைப்பு

தினத்தந்தி
|
25 May 2024 6:15 PM IST

நடிகர் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யா திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை ,

'ஆக்ஷன் கிங்' என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன், நடிகர் உமாபதிக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நடிகர் அர்ஜுனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோவிலில் நண்பர்கள், உறவினர்கள் சூழ எளிமையாக இந்த நிகழ்வு நடந்தது.


அர்ஜுன் தொகுத்து வழங்கிய 'சர்வைவர்' நிகழ்ச்சி மூலம் ஐஸ்வர்யாவுக்கு அறிமுகமானவர் உமாபதி. நிகழ்ச்சியில் உமாபதியின் நற்குணம் அர்ஜுனுக்குப் பிடித்துப் போக தனது வீட்டு மாப்பிளையாக பச்சைக் கொடி காட்டினார்.

உமாபதி அதாகப்பட்டது மகாஜனங்களே, மணியார் குடும்பம், தண்ணி வண்டி, சேரன் இயக்கிய திருமணம் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.


ஐஸ்வர்யாவும் விஷாலுடன் 'பட்டத்து யானை' உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்கக் கூடாது என தம்பி ராமையா குடும்பம் கேட்டுக் கொண்டதாக தகவல் பரவியது. ஆனால், இது குறித்து ஐஸ்வர்யா இன்னும் தெளிவுப்படுத்தவில்லை. இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்து ஆறு மாதங்களான நிலையில் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர்.


வரும் ஜூன் 10-ம் தேதி கெருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனின் தோட்டத்தில் தான் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் உமாபதி திருமணம் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலருக்கும் அழைப்பிதழ் வைக்கும் பணியை அர்ஜுன் ஆரம்பித்துள்ளார்.

தனது மகள் திருமணத்துக்காக அழைப்பிதழ் வைக்கும் பணியை ஆரம்பித்துள்ள நடிகர் அர்ஜுன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு குடும்பத்துடன் சென்று அழைப்பு விடுத்துள்ள புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. தம்பி ராமைய்யாவும் தனது குடும்பத்துடன் உடன் சென்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்துள்ளார்.

மேலும் செய்திகள்