முத்த காட்சிகளில் நடிப்பதால் வீட்டில் தகராறு - நடிகர் நானி பேட்டி
|முத்த காட்சிகளில் நடிக்கும்போதெல்லாம் என் வீட்டில் தகராறு நடக்கிறது என்று நடிகர் நானி அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நான் ஈ படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நானி. நீதானே என் பொன் வசந்தம், ஆஹா கல்யாணம், நிமிர்ந்து நில் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார்.
சமீப காலமாக நானியின் படங்களில் கதாநாயகியின் உதட்டில் முத்தமிடும் காட்சிகள் இடம்பெறுகின்றன. தற்போது அவர் நடித்துள்ள ஹாய் நன்னா படத்திலும் முத்தமிடும் காட்சி உள்ளது.
இந்த நிலையில் ஐதரபாத்தில் படவிழாவில் பங்கேற்ற நானியிடம் உங்களுடைய எல்லா படங்களிலும் முத்த காட்சிகளை வைக்கும்படி டைரக்டரை நீங்கள் நிர்ப்பந்திக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்து நானி கூறும்போது, "எனது எல்லா படத்திலும் முத்த காட்சிகள் இல்லை. சில படங்களில் மட்டும் இந்த மாதிரி காட்சிகள் இருக்கின்றன. அதுபோன்ற காட்சிகளில் நடிக்கும்போதெல்லாம் என் வீட்டில் தகராறு நடக்கிறது.
ஆனால் நான் ஒரு நடிகன். கதைக்கு தேவைப்படும்போது அது போன்ற காட்சியில் நடிக்கிறேன். எனது கடந்த காலத்து படங்களை பார்த்தால் உங்களுக்கு இந்த விஷயம் புரியும். சினிமாவிற்கு முத்த காட்சி அவசியம் என்று இருந்தால் மட்டுமே நடிப்பேனே தவிர விளம்பரத்துக்காக நடிக்க மாட்டேன்'' என்றார்.