இருவரும் காதலிக்கிறீர்களா..? இல்லையா..? சித்தார்த்-அதிதி ராவ் புகைப்படத்தால் குழம்பிய ரசிகர்கள்
|நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருவரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை,
திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் சித்தார்த். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சித்தா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் சமீபத்தில் திரைத்துறையை விட்டு விலக இருப்பதாகவும் இனி படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டு தொழிலில் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறியிருந்தார். இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த சில மாதங்களாக நடிகை அதிதிராவ், சித்தார்த்துக்கும் காதல் என்று கிசுகிசு பரவி வந்தது. இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. மேலும், இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்களும் வைரலானது. சமீபத்தில், நடிகர் சித்தார்த்துடன் இணைந்து விஷாலின் எனிமி படத்தில் இடம்பெற்ற 'மாலை டம் டம்' பாடலுக்கு நடிகை அதிதி ராவ் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலானது.
இதனால் அவர்கள் காதல் உறுதிபடுத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இதற்கு நடிகை அதிதி ராவ் மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும் மக்கள் அப்படித்தான் பேசுவார்கள், அதை தடுக்க முடியாது எதையும் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தங்களின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனைப் பார்த்த ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். மேலும் இருவரும் காதலிக்கிறீர்களா..? இல்லையா..? என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.