படங்கள் தோல்விக்கு நடிகைகள் காரணமா? டாப்சி கோபம்
|விமர்சனங்களை கண்டு கொள்வது இல்லை என்று கூறியுள்ளார்..
தமிழில் ஆடுகளம் படத்தில் நாயகியாக அறிமுகமாகி பிரபல நடிகையாக உயர்ந்த டாப்சி தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்தார். தற்போது இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். நாயகியை முதன்மைப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிகின்றன. மீண்டும் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க வராமல் இந்தியிலேயே கவனம் செலுத்துகிறார்.
இதுகுறித்து டாப்சி கூறும்போது, "நான் நடித்த சில தென்னிந்திய படங்கள் தோல்வி அடைந்தன. குறிப்பாக தெலுங்கு படங்கள் தோல்வியை சந்தித்தன. இதனால் எல்லோரும் என்னை விமர்சனம் செய்தனர். துரதிர்ஷ்டக்காரி என்றார்கள்.
நான் சினிமா பின்னணி உள்ள குடும்பத்தில் இருந்து வரவில்லை. அதனால் எந்த மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்ற புரிதல் எனக்கு இல்லாமல் இருந்தது. செய்த தவறுகளில் இருந்து நிறைய பாடம் கற்றுக்கொண்டேன். படம் வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தால் கதாநாயகிகள் மீது ஏன் குற்றம் சுமத்த வேண்டும்.
படங்களில் மொத்தமாக சில காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் மட்டுமே கதாநாயகி இருப்பார். அப்படி இருக்கும்போது தோல்விக்கு அவர்கள்தான் காரணம் என்று பழிசொல்வது தவறு. என் விஷயத்தில் இதுதான் நடந்தது. ஆரம்பத்தில் இதற்காக வருத்தப்பட்டேன். பிறகு விமர்சனங்களை கண்டு கொள்வது இல்லை'' என்றார்.