ராயன் படம் - 'வாட்டர் பாக்கெட்' பாடலை எழுதிய கானா காதரை பாராட்டிய இசைப்புயல்
|நடிகர் தனுஷின் 50-வது படமான ராயன் திரைப்படத்தில் வாட்டர் பாக்கெட் பாடலை எழுதிய கானா காதர் மற்றும் ஏ.ஆர்.ரகுமான், தனுஷ் ஆகியோருக்கு இடையில் நடந்த பேச்சுவார்த்தையின் வீடியோ வெளியாகி வைரல் ஆகியுள்ளது.
நடிகர் தனுஷின் ராயன் படத்தின் இரண்டாவது பாடலான 'வாட்டர் பாக்கெட்' மே 24-ம் தேதியான நேற்று வெளியானது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார் . அதில் சந்தீப் மற்றும் அபர்ணா கதாபாத்திரங்களின் காதல் கதையைக் காட்டும் பாடலுக்கான லிரிக்கல் வீடியோ இருந்தது. அதனை தனுஷ் வெளியிட்டார். இந்த மாதத் தொடக்கத்தில் 'அடங்காத அசுரன்' என்ற முதல் பாடல் வெளியிடப்பட்டது. அந்தப் பாடலை தனுஷ் எழுதி, பாடவும் செய்திருந்தார். ராயன் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஜூன் 13-ம் தேதி வெளியாகிறது.
மேலும், வாட்டர் பாக்கெட் வீடியோ பாடலை எழுதிய கானா காதரை ராயபுரத்தில் இருந்து அழைத்து வந்து, நடிகர் தனுஷ், ஏ.ஆர். ரகுமானுக்கு அறிமுகப்படுத்துகிறார். அப்போது உங்களுடைய பாடலில் காமெடி அதிகமாக இருக்கிறது என தனுஷ் பாராட்டுகிறார். மேலும் ஏ.ஆர்.ரகுமான் முன் பாட்டுப்பாடி காட்டுகிறார், கானா காதர். அதில் மயங்கும் ஏ.ஆர். ரகுமான் 'சூப்பர்ப்பா, உனக்கு நல்ல பியூச்சர் அமையணும். நிறைய கம்போஸ் செய்யணும்'' என வாழ்த்துகிறார்.
கானா காதரை, ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவுக்கு அழைத்து வந்து பாடல் எழுத நடிகர் தனுஷ் பரிந்துரைக்கும் வீடியோவை சன் பிக்சர்ஸ் படக்குழு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.