படத்தை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம் ஆனால்... - நடிகர் சூரி
|சமுத்திரக்கனி நடிக்கும் 'ராமம் ராகவம்' படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி கலந்துகொண்டு பேசினார்.
சென்னை,
தமிழில் விஷ்ணு விஷால், சூரி உள்ளிடோர் நடித்த 'வெண்ணிலா கபடி குழு' படம், தெலுங்கில் 'பீமிலி கபடி ஜட்டு' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
அந்த படத்தில் புரோட்டா சூரி கதாபாத்திரத்தில் நடித்தவர் தன்ராஜ். தற்போது அவர் டைரக்டராக மாறியிருக்கிறார். 'ராமம் ராகவம்' என்ற பெயரில் புதிய படத்தை அவர் இயக்கியுள்ளார்.
தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கும் 'ராமம் ராகவம்' திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தத் திரைப்படம் அப்பா மகன் உறவை அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாக தயாராகியுள்ளது.
சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்துள்ள 'ராமம் ராகவம்' பட டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் டைரக்டர் பாலா, நடிகர்கள் சூரி, தம்பி ராமையா, பாபி சிம்ஹா உள்ளிட்டப் பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இதில் சூரி பேசும்போது, 'பீமிலி கபடி ஜட்டு' என்ற படத்தில் புரோட்டா காமெடியை தன்ராஜ் செய்திருந்தார். இப்போது அவர் டைரக்டராகி விட்டார். டைரக்டர்கள் எல்லாம் நடிகராக மாறிக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல ஒரு நடிகர், அதுவும் காமெடி நடிகர் டைரக்டராக வந்திருப்பது பெரிய விஷயம்.
கதாநாயகர்களை விட கூடுதலான படங்களில் நடிக்கும் வாய்ப்பு காமெடி நடிகர்களுக்கு சாத்தியம். அந்தவகையில் நிறைய டைரக்டர்களுடன் காமெடி நடிகர்கள் பணிபுரிந்திருப்பார்கள். ஒவ்வொரு டைரக்டர்களிடம் இருந்தும் ஒரு அணுகுமுறையை பின்பற்ற முடியும்.
படத்தை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் அந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு செல்வதே பெரிய விஷயம்', என்றார்.