'ஒன் அண்ட் ஒன்லி பெஸ்ட்' - ரஜினிகாந்த் குறித்து பாலிவுட் நடிகர் பேசும் வீடியோ வைரல்
|பாலிவுட் நடிகர் அனுபம் கெர், ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
சென்னை,
பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி மகன் ஆனந்த் அம்பானி திருமண நிகழ்ச்சி மும்பையில் கோலாகலமாக நடந்து வருகிறது. இதில் கடந்த13-ந் தேதி இரவு ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வெகு விமரிசையாக நடந்தது.
உலகமே உற்று நோக்கிய இந்த திருமணத்தில் உள்ளூர் தலைவர்கள் முதல் உலக தலைவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர். ஹாலிவுட் திரை நட்சத்திரங்கள், இந்தியாவின் முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அவ்வாறு இதில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகர் அனுபம் கெர், ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதனுடன், ''ஒன் அண்ட் ஒன்லி' ரஜினிகாந்த். அவர் சிறந்தவர் மற்றும் மிகவும் தாழ்மையானவர். கடவுள் என் நண்பர் ரஜினிக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் தருவாயாக. அவர் ஒரு தேசிய பொக்கிஷம். ஜெய் ஹோ!' என்று பதிவிட்டுள்ளார்.
இவ்வாறு ரஜினிகாந்துடன், அனுபம் கெர் வீடியோ எடுப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவின்போதும் ரஜினியை சந்தித்து வீடியோ எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.