கன்னட அமைப்பு எதிர்ப்பு; நடிகர் சித்தார்த் விளக்கம்
|‘சித்தா’ பட நிகழ்ச்சியில் சித்தார்த் பங்கேற்றபோது அவரை கன்னட அமைப்பினர் பேசவிடாமல் காவிரி பிரச்சினையை கிளப்பி கோஷம் எழுப்பி வெளியே அனுப்பினர். இதுக்குறித்து நடிகர் சித்தார்த் விளக்கம் அளித்துள்ளார்.
அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நடித்த 'சித்தா' படம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் பெங்களூருவில் நடந்த 'சித்தா' பட நிகழ்ச்சியில் சித்தார்த் பங்கேற்றபோது அவரை கன்னட அமைப்பினர் பேசவிடாமல் காவிரி பிரச்சினையை கிளப்பி கோஷம் எழுப்பி வெளியே அனுப்பினர்.
'சித்தா' படம் வெற்றிகரமாக ஓடுவதை சென்னையில் படக்குழுவினர் கொண்டாடினர். இதில் சித்தார்த் பங்கேற்று பெங்களூரில் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார். அவர் பேசும்போது, "நான் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது காவிரி பிரச்சினைக்காக கர்நாடகாவில் பந்த் நடக்கவில்லை. பந்த் இல்லாத நாளில்தான் அங்கு போய் பேசினேன்.
அடுத்த நாள்தான் பந்த் நடக்க இருந்தது. 'சித்தா' என்ற நல்ல படத்தை எடுத்து இருக்கிறோம். அங்கு நடந்த பிரச்சினை பற்றி பேசினால் கவனம் சிதறிவிடும் என்பதற்காகவே அமைதியாக இருந்தேன்.
பிரகாஷ்ராஜ், சிவராஜ்குமார் ஆகியோர் மன்னிப்பு கேட்டனர். அவர்களுக்கு நன்றி. காவிரி பிரச்சினையில் இருக்கும் அரசியல் எனக்கு தெரியாது. அதுகுறித்து நான் பேசியதே இல்லை. நான் பணம் செலவு செய்து எடுத்த படத்தை விளம்பரப்படுத்தவே அங்கு சென்றேன். இனிமேல் எந்த தயாரிப்பாளருக்கும், கலைஞர்களுக்கும் இதுபோல் நடக்கக்கூடாது'' என்றார்.