நடிகை ராக்கி சாவந்த் கணவருக்கு மற்றொரு சிக்கல்; பலாத்கார புகார் அளித்த ஈரானிய இளம்பெண்
|நடிகை ராக்கி சாவந்தின் கணவர் அடில் கானுக்கு எதிராக ஈரானிய இளம்பெண் ஒருவர் பலாத்கார புகார் அளித்து உள்ளார்.
மைசூரு,
பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த் கடந்த ஆண்டு அதில் கான் துரானி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் அதில் துரானிக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளது என ராக்கி சாவந்த் குற்றம்சாட்டினார்.
அவர், தன்னை அடித்து துன்புறுத்தி, பணம் மற்றும் நகை உள்ளிட்டவற்றை திருடி சென்று விட்டார் என கணவர் மீது போலீசில் பரபரப்பு புகார் அளித்து உள்ளார். என்னை ஏமாற்றிய அவரை விவாகரத்து செய்ய உள்ளேன். இனி அவருடன் எந்த சமரசமும் செய்யப்போவதில்லை என்றும் கூறினார்.
மேலும் அவர் கணவர் மீது மும்பை ஒஷிவாரா போலீசில் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரில், அதில் துரானி தன்னை அடித்ததாக கூறி இருந்தார். இதேபோல தன்னுடைய முகத்தில் திராவகம் வீசிவிடுவேன், சாலை விபத்து மூலம் கொன்று விடுவேன் என கணவர் மிரட்டினார் மற்றும் தொழுகை செய்யுமாறு கட்டாயப்படுத்தினார் என்றும் புகாரில் தெரிவித்து உள்ளார்.
இந்த புகார்கள் தொடர்பாக போலீசார் அதில் துரானி மீது மோசடி, காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனை தொடர்ந்து மற்றொரு பரபரப்பு புகாரை கணவர் அதில் மீது ராக்கி சாவந்த் கூறினார். அதில், தன்னை நிர்வாண படம் பிடித்து, பணத்திற்காக விற்று விட்டார் என்று மற்றொரு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இந்த வழக்கு சைபர் கிரைம் துறையிடம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அதில் கான் துர்ரானி மீது மைசூரு நகரில் ஈரான் நாட்டை சேர்ந்த இளம்பெண் பரபரப்பு புகார் தெரிவித்து உள்ளார். அதில், மைசூருவில் ஒன்றாக வசித்தபோது, தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என பொய் கூறி அதில் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.
அவரிடம், 5 மாதங்களுக்கு முன் திருமணம் பற்றி பேசியபோது, அதனை நிராகரித்ததுடன், இதுபோன்ற பல்வேறு இளம்பெண்களுடன் தனக்கு தொடர்பு உள்ளது என கூறி விட்டார். போலீசில் புகார் எதுவும் தெரிவிக்க கூடாது என்றும், மீறினால் தனது ஆபாச புகைப்படங்களை பரப்பி விடுவேன் என மிரட்டினார் என்று புகாரில் தெரிவித்து உள்ளார்.
இதனை அடுத்து 376, 417,420, 504 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. நடிகை ராக்கி சாவந்த் தமிழில் 'என் சகியே', 'முத்திரை' கம்பீரம் உள்ளிட்ட படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உள்ளார்.