< Back
சினிமா செய்திகள்
நடிகை நயன்தாரா மீது மேலும் ஒரு புகார்
சினிமா செய்திகள்

நடிகை நயன்தாரா மீது மேலும் ஒரு புகார்

தினத்தந்தி
|
12 Jan 2024 7:25 AM IST

அன்னபூரணி திரைப்படம் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டு உள்ளது என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

நடிகை நயன்தாராவின் நடிப்பில், நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான திரைப்படம் "அன்னபூரணி". இந்த படம் சமீபத்தில் "நெட்பிளிக்ஸ்" ஓ.டி.டி. தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் இந்து மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், லவ் ஜிகாத்தை ஊக்குவிப்பதாகவும் கூறி பஜ்ரங்தள் அமைப்பு மும்பை ஓசிவாரா போலீஸ் நிலையத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன் புகார் அளித்தது.

இதற்கிடையே இந்து தகவல் தொழில்நுட்ப பிரிவு என்ற அமைப்பின் நிறுவனர் ரமேஷ் சோலங்கி, தென் மும்பையில் உள்ள லோக்மான்ய திலக் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறி இருப்பதாவது:-

'அன்னபூரணி' திரைப்படம் கடவுள் ராமரை இழிவுபடுத்துவதுடன், இந்து மத உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டு உள்ளது. கோவில் பூசாரியின் மகளாக நடித்துள்ள நயன்தாரா, கடைசி காட்சியில் பிரியாணி செய்வதற்கு முன்பு ஹிஜாப் அணிந்து நமாஸ் செய்வதாக காட்டப்பட்டு உள்ளது. மற்றொரு காட்சியில் நயன்தாரா நண்பர் பாத்திரமாக வரும் பர்கான் இறைச்சி வெட்டும்படி அவரை மூளை சலவை செய்கிறார். அதுமட்டும் இன்றி ராமரும், சீதாவும் இறைச்சி சாப்பிட்டதாக கூறுகிறார்.

மேலும் நயன்தாரா கோவிலுக்கு செல்லாமல் பர்கானின் இடத்திற்கு இப்தாருக்கு செல்லும் மற்றொரு காட்சி உள்ளது. எனவே நடிகை நயன்தாரா, இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா மற்றும் படத்தில் தொடர்புடையவர்கள் மீது மத உணர்வுகளை புண்படுத்தியதற்காகவும், லவ் ஜிகாத்தை ஊக்குவித்ததாகவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருவதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும் செய்திகள்