இந்தியாவின் அடுத்த ஏ.ஆர். ரகுமான் அனிருத் - ஜூனியர் என்.டி.ஆர்
|இசையமைப்பாளர் அனிருத்தின் திறமை அற்புதமானது. அடுத்த ஏ.ஆர். ரகுமானாக அனிருத் மாறிவருகிறார் என்று ஜூனியர் என்.டி.ஆர் பாராட்டியுள்ளார்.
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தனது 30-வது படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கும் இப்படத்துக்கு 'தேவரா பாகம்-1' என்று பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். வருகிற 27-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளநிலையில், படக்குழு புரொமோசன் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் ஜூனியர் என்டிஆர் அனிருத் பற்றி பேசியதாவது: எனக்கு இசை என்றால் மிகவும் பிடிக்கும். அனிருத்தின் திறமை மிகவும் அற்புதமானது. மெல்லிசை பாடல் வேண்டுமென்றால் வேற லெவலில் தருகிறார். நாயகனை உயர்த்திப்பிடிக்க வேண்டிய பாடல் என்றாலும் நடனாமாட பாடல் வேண்டுமானலும் தருகிறார். திறமையில்லாவிட்டால் இவ்வளவு சூப்பர் ஹிட் பாடல்களை அனிருத்தால் தரமுடிந்திருக்காது. இந்தியாவில் இன்று அதிகமாக அவரது இசையை விரும்புகிறார்கள்.
தென்னிந்தியாவில் இளையராஜா சார், கீரவாணி சார், ரகுமான் சார் என பலர் சிறப்பான இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். தற்போது, அனிருத் இந்த இடத்தைப் பிடித்துவிட்டார். அவரிடம் அதிகமான திறமைகள் இருக்கின்றன. அனிருத் ஏ.ஆர்.ரகுமான் சாரின் லெவலை எட்டி, சர்வதேச படங்களுக்கு இசையமைப்பார் என்று நான் நம்புகிறேன். நீங்கள் தேவரா படத்தின் பாடல்களைக் கேட்டிருப்பீர்கள். அவரது இதயத்தையும் ஆன்மாவையும் கொண்டு இசையமைத்துள்ளார். பின்னணி இசைக்காக காத்திருக்கிறேன் என்றார்.