< Back
சினிமா செய்திகள்
அனிமல் படத்தால் நல்ல விஷயம் நடந்துள்ளது - விமர்சனங்களுக்கு ரன்பீர் கபூர் பதில்
சினிமா செய்திகள்

'அனிமல் படத்தால் நல்ல விஷயம் நடந்துள்ளது' - விமர்சனங்களுக்கு ரன்பீர் கபூர் பதில்

தினத்தந்தி
|
30 Jan 2024 8:02 AM GMT

ஓடிடி வெளியீட்டிற்கு பிறகு அனிமல் படம் பல்வேறு விமர்சனங்களில் சிக்கி உள்ளது.

சென்னை,

பாலிவுட்டில் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் ரூ.900 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இதற்கிடையே இந்த படம் கடந்த 26-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடி வெளியீட்டிற்கு பிறகு இந்த படம் பல்வேறு விமர்சனங்களில் சிக்கி உள்ளது. இந்த படத்தை சமூக வலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பல சினிமா பிரபலங்களும் இந்த படத்தை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் அனிமல் பட விமர்சனங்களுக்கு நடிகர் ரன்பீர் கபூர் பதிலளித்துள்ளார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், 'சமூகத்தில் நிலவும் நச்சுத்தன்மை வாய்ந்த ஆணாதிக்கம் பற்றி ஒரு ஆரோக்கியமான உரையாடல் தற்போது தொடங்கியுள்ளது. இது உண்மையிலேயே நல்ல விஷயம். அனிமல் படத்தால் இது நடந்துள்ளது.

ஒருபடம் குறைந்தபட்சம் உரையாடலை தொடங்கி வைக்க வேண்டும். ஏதாவது தவறு நடந்தால், அதை தவறு என்று சுட்டி காட்டி சமூகத்தில் உரையாடல் தொடங்காத வரை அதை நாம் உணரவே மாட்டோம். அந்த தவறைத்தான் படத்தில் நாங்கள் காட்டியுள்ளோம்' என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்