'அந்தகன்' படத்தின் வெற்றி... ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த படக்குழு!
|‘அந்தகன்’ படத்திற்கு கிடைத்த வெற்றிக்காக ரசிகர்களுக்கு ‘அந்தகன்’ பட குழுவினர் நன்றி தெரிவித்துள்ளார்கள்.
ஸ்டார் மூவிஸ் சார்பில் சாந்தி தியாகராஜன் தயாரிப்பில், நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில், 'டாப் ஸ்டார்' பிரசாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 9ம் தேதி வெளியான திரைப்படம் 'அந்தகன்'. இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எனவே அந்தகன் பட குழுவினர், படத்திற்கு கிடைத்த வெற்றிக்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்கள்.
இதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினை படக்குழுவினர் ஒருங்கிணைத்திருந்தார்கள். இந்த நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் இயக்குநர் தியாகராஜன், இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார், 'டாப் ஸ்டார்' பிரசாந்த், நடிகைகள் சிம்ரன், வனிதா விஜயகுமார், பிரியா ஆனந்த், செம்மலர் அன்னம், நடிகர் பெசன்ட் ரவி, கலை இயக்குநர் செந்தில் ராகவன், சண்டை பயிற்சி இயக்குநர் ராம்குமார், இயக்குநர் பிரவீண் காந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நடிகை சிம்ரன் பேசுகையில், "திரையுலகப் பயணத்தில 29 வருடங்களை நிறைவு செய்து விட்டேன். இந்த முப்பதாவது ஆண்டில் 'அந்தகன்' சூப்பர் ஹிட் படமாக அமைந்திருக்கிறது. பிரசாந்த் என்னுடைய ராசியான ஜோடி. கே. எஸ். ரவிக்குமார் எனக்கு குரு. நான் இன்று தமிழில் இந்த அளவிற்கு பேசுகிறேன் என்றால் அதற்கு அவரும் ஒரு காரணம். " என்றார்.
இயக்குநர் தியாகராஜன் பேசுகையில், "பிரசாந்த் நாயகனாக இருந்தாலும் அனைத்து கேரக்டருக்கும் சமமான வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். கதாநாயகியாக யாரை நடிக்க வைப்பது என்பது குறித்து யோசிக்க தொடங்கினோம். அப்போது நடிகை சிம்ரனை தவிர வேறு யாரும் என் எண்ணத்தில் வரவில்லை. அவரும் நடிக்க ஒப்புக்கொண்டு பெரிய அளவில் பேராதரவை வழங்கினார். " என்றார்.
பிரசாந்த் பேசும்போது, "அந்தகன் படத்தை இந்த அளவில் மிகப்பெரிய வெற்றி படமாக மாற்றியதற்கு ரசிகர்களுக்கும் ஊடகத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. இந்த படத்தின் வெற்றிக்கு நடிகர் கார்த்திக் போன்ற அனுபவமுள்ள நட்சத்திரங்களும் முக்கிய காரணம். கே எஸ் ரவிக்குமார், யோகி பாபு, ஊர்வசி ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை மறக்க முடியாது. மேலும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தேசிய விருது வென்றுள்ள மணிரத்னம், ஏ ஆர் ரகுமான் போன்ற அனைத்து கலைஞர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.