'இது போன்ற பிரச்சினையை என்னுடைய 8 வயதிலிருந்தே சந்திக்கிறேன்' - நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்
|சினிமாவை விட வெளியில்தான் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உணர்வதாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் கூறினார்.
சென்னை,
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தமிழில், விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை, மாறா, இறுகப்பற்று உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'சினிமாவை விட வெளியில்தான் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உணர்கிறேன். இது போன்ற பிரச்சினையை நான் என்னுடைய 8 வயதிலிருந்தே சந்திக்கிறேன். அதிர்ஷ்டவசமாக திரைத் துறையில் நான் எந்தவித பாலியல் துன்புறுத்தல்களையும் சந்திக்கவில்லை. ஆனால், மற்றவர்களும் என்னைப்போல எந்த துன்புறுத்தல்களையும் எதிர்கொள்ளவில்லை என்று சொல்ல முடியாது. இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது அதை யாரிடம் எப்படி சொல்வது என்பது கூட தெரியாது.
ஒருவேளை நீங்கள் அதை காலதாமதமாக கூட சொல்லியிருப்பீர்கள். இது போன்ற பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட விஷயங்களை கண்காணிக்க முறையான கட்டமைப்பு தேவை. சிறிய மாற்றங்கள் கூட நமக்கு உதவிகரமாக இருக்கும். இந்த பிரச்சினைகளுக்கு அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும்.' என்றார்.