< Back
சினிமா செய்திகள்
விஜய் மீதான அன்பை வெளிப்படுத்தும் வாய்ப்பு - தி கோட் குறித்து யுவன் நெகிழ்ச்சி
சினிமா செய்திகள்

விஜய் மீதான அன்பை வெளிப்படுத்தும் வாய்ப்பு - 'தி கோட்' குறித்து யுவன் நெகிழ்ச்சி

தினத்தந்தி
|
5 Sept 2024 4:19 PM IST

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் , 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) படத்தில் நடித்துள்ளார். .ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள, இப்படத்தில் விஜயகாந்தின் ஏஐ தோற்றத்தை படக்குழுவினர் உபயோகித்திருக்கின்றனர்.

உலகம் முழுவதும் 5 ஆயிரம் திரையரங்குகளில் இன்று இந்த படம் வெளியாகியது. இப்படத்தை ரசிகர்கள் திருவிழாபோல் கொண்டாடுகிறார்கள். கட்சி தொடங்கிய பின் வெளியாகும் விஜய்யின் முதல் படம் என்பதால் 'தி கோட்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் முதல் காட்சி காலை 4 மணிக்கு தொடங்கியது. அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கியது.

இந்நிலையில், விஜய் மீதான என் அன்பை வெளிப்படுத்துவதற்கு தகுந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி. விஜய் மீதான என் அன்பை வெளிப்படுத்துவதற்கு தகுந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி. குறிப்பாக வெங்கட் பிரபு இல்லாமல் இது எதுவும் நடந்திருக்காது" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்