ஒரு நாளில் ரூ.2 கோடி சம்பாதிக்கும் நடிகர்
|சினிமா தொழில் நசிந்து தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்து வருவதாக ஒருபுறம் பேசினாலும் இன்னொரு புறம் நடிகர், நடிகைகள் படத்துக்கு படம் சம்பளத்தை கணிசமாக உயர்த்துவதாக குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன. அனைத்து மொழி நடிகர்களும் சம்பளத்தை ஏற்றி இருப்பதாக கூறப்படுகிறது.
புஷ்பா படம் மூலம் பிரபலமான அல்லு அர்ஜுன் இந்தி படமொன்றில் நடிக்க ரூ.125 கோடி சம்பளம் பேசி உள்ளார். சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் சினிமாவில் நடிக்க தனக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ.2 கோடி கிடைக்கிறது என்று தெரிவித்து உள்ளார். மச்சிலிபட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பவன் கல்யாண் பேசும்போது. "நான் சினிமாவில் நடித்து நிறைய சம்பாதிக்கிறேன். ஒரு நாள் நடிக்க ரூ.2 கோடி வாங்குகிறேன். மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசியலுக்கு வந்து இருக்கிறேன்'' என்றார்.
பவன் கல்யாண் சமீபத்தில் ஒரு படத்தில் 35 நாட்கள் நடிக்க ரூ.75 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது.