அருண்விஜய் படத்தில் எமிஜாக்சன்
|அருண் விஜய் நாயகனாக நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தில் நடிப்பதற்காக எமிஜாக்சன் சென்னை வந்துள்ளார்
தமிழில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் எமிஜாக்சன். சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த இவர், இப்போது மீண்டும் 'அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தில் நடிப்பதற்காக சென்னை வந்துள்ளார். விஜய் இயக்கும் இந்தப் படத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்கிறார்.
இதன் முதல் கட்ட படப்பிடிப்பை லண்டனில் முடித்து விட்டு சென்னை பின்னி மில்லில் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் ரூ.3 கோடியே 50 லட்சம் செலவில் லண்டன் சிறையின் பிரதியை அரங்காக அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர். இதில் வெளிநாட்டைச் சேர்ந்த துணை நடிகர் - நடிகைகள் பங்கேற்று நடிக்க உள்ளனர். இந்த ஜெயில் அரங்கில் அருண் விஜய்யின் சண்டை காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. ஏற்கனவே லண்டனில் படப்பிடிப்பை நடத்தியபோது அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்ட நிலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்திய நிலையில், 'படப்பிடிப்பு முடிந்த பிறகே சிகிச்சை எடுத்துக்கொள்வேன்' என்று உறுதியாக மறுத்து விட்டார். எம்.ராஜசேகர், எஸ்.சுவாதி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சந்தீப் கே.விஜய் ஒளிப்பதிவு செய்கிறார்.