நடிகர் சங்க பொறுப்பில் இருந்து விலகும் மோகன்லால் - காரணம் என்ன?
|மலையாள நடிகர் சங்க பொறுப்பில் தொடர விரும்பாமல் ராஜினாமா செய்ய மோகன்லால் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருவனந்தபுரம்,
மலையாள நடிகர் சங்கத்துக்கு 2021-ல் நடந்த தேர்தலில் தலைவராக மோகன்லாலும், செயலாளராக எடவேல பாபுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
ஆனால் தலைவர் பொறுப்பு ஏற்ற பிறகு மோகன்லாலின் செயல்பாடுகளில் நடிகைகள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தனர். குறிப்பாக பாலியல் பாலாத்கார வழக்கில் சிக்கி நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்ட திலீப்பை மீண்டும் சங்கத்தில் மோகன்லால் சேர்த்துக்கொண்டது சர்ச்சையானது. மோகன்லாலை நடிகைகள் பலரும் கண்டித்தனர்.
நடிகர் சங்க கூட்டங்களிலும் அவருக்கு எதிர்ப்பு குரல் ஒலித்தன. இதன் காரணமாக மீண்டும் நடிகர் சங்க பொறுப்பில் தொடர விரும்பாமல் ராஜினாமா செய்ய மோகன்லால் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலையாள நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. வேட்பு மனுக்கள் வருகிற 3-ந் தேதி முதல் பெறப்படுகின்றன. மோகன்லால் மீண்டும் தலைவர் பதவியில் நீடிக்கப்போவதில்லை என்று தெரிவித்து இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினர். இதுபோல் 25 ஆண்டுகளாக நடிகர் சங்க பொறுப்பில் இருக்கும் எடவேல பாபுவும் ராஜினாமா செய்ய இருக்கிறார்.