தமிழில் வரும் அமிதாப்பச்சன் படம்
|அமிதாப்பச்சன் இந்தியில் நடித்துள்ள ‘கண்பத்' படமும் தமிழில் வருகிறது.
இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாகும் படங்களை தமிழிலும் வெளியிட அங்குள்ள திரையுலகினர் ஆர்வம் காட்டுகின்றனர். ஏற்கனவே அதிக பிறமொழி படங்கள் தமிழில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.
இந்த வரிசையில் அமிதாப்பச்சன் இந்தியில் நடித்துள்ள 'கண்பத்' படமும் தமிழில் வருகிறது. இது தவிர கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகளிலும் இந்தப்படம் வெளியாக இருக்கிறது. இதில் டைகர் ஷராப், கீர்த்தி சனோன் ஆகியோரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏற்கனவே ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய படமாக இருக்கும் கண்பத் படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப்படத்தை விகாஸ் பாஹல் டைரக்டு செய்துள்ளார்.
ரஜினிகாந்தின் 170-வது படத்திலும் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது அமிதாப்பச்சன் நடிக்கும் முதல் நேரடி தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் படப்பிடிப்பில் விரைவில் அவர் இணைய இருக்கிறார்.