ஷாருக்கான் படத்தில் வில்லனாக அபிஷேக் பச்சன்
|ஷாருக்கான் நடிப்பில் அடுத்து உருவாகும் படத்தில் நடிகர் அபிஷேக் பச்சன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை,
பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் நடிகர்கள் ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பாக்ஸ் ஆபிஸில் ரூ. 1000 கோடி வசூலை எட்டிய இந்தப் படத்தில் அனிருத்தின் இசையும் அதிகம் பேசப்பட்டது. ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'பதான்', 'ஜவான்', 'டங்கி' படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.
இந்நிலையில், ஷாருக்கானின் புதிய படத்தை 'கஹானி', 'ஜானே ஜான்' ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சுஜாய் கோஷ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்துக்கு 'கிங்' என தலைப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ஷாருக்கானின் மகள், சுஹானா திரையுலகில் அறிமுகமாகிறார். அனிருத் படத்துக்கு பின்னணி இசை அமைப்பார் என கூறப்படுகிறது.
ஷாருக்கான் - அனிருத் கூட்டணி மறுபடியும் இணைகிறது. 'கிங்' படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடங்க இருக்கிறது. இயக்குநர் சுஜாய் கோஷ் படத்தின் பிரீ- புரொடக்சன் பணிகளில் ஈடுபட்டுள்ளார். 'கிங்' திரைப்படம் ஆக்சன் திரில்லர் கதைக்களமாக உருவாக இருக்கிறது.
தற்போது, இந்தப் படத்தின் புதிய அப்டேட்டாக அமிதாப்பச்சனின் மகனும், பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சன் ஷாருக்கானுக்கு வில்லனாக இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அமிதாப் பச்சனே உறுதிப்படுத்தியுள்ளார்.
ரசிகர் ஒருவர் எக்ஸ் தள பக்கத்தில் அபிஷேக் பச்சன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் செய்தியை பகிர்ந்து, "படங்களைப் பார்த்தவர்களுக்கு அபிஷேக் பச்சனால் எதிர்மறை கதாபாத்திரத்தில் எந்த அளவுக்கு நடிக்கு முடியும் என்பது தெரியும். சிறப்பான நடிப்பை இப்படத்தில் வெளிப்படுத்துவார்" என பதிவிட்டுள்ளார். இதனை மேற்கொள்காட்டி கருத்து பதிவிட்டுள்ள அமிதாப் பச்சன், "வாழ்த்துகள் அபிஷேக். இது தான் சரியான நேரம்" என பதிவிட்டுள்ளார். அமிதாப் பச்சனின் கருத்து மூலம் தகவல் உறுதியானது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
"அபிஷேக் ஒரு நடிகர், அவருடைய முழுத் திறமையும் இன்னும் முழுமையாக வெளிப்படுத்தவில்லை. சிக்கலான வேடங்களைக் கொடுத்தால் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் திறமை அவருக்கு உண்டு. இவ்வளவு பெரிய அளவிலான வணிக படத்தில் அவர் தனது நடிப்பால் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவார்" என்றும் தெரிவித்துள்ளார். அமிதாப் பச்சனின் கருத்து மூலம் தகவல் உறுதியானது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.