< Back
சினிமா செய்திகள்
உடல் நிலை குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமிதாப் பச்சன்
சினிமா செய்திகள்

உடல் நிலை குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமிதாப் பச்சன்

தினத்தந்தி
|
16 March 2024 1:55 PM IST

உடல் நிலை குறித்து பரவிய வதந்திகளுக்கு அமிதாப் பச்சன் முற்றுப்புள்ளி வைத்தார்.

மும்பை,

ஐ.எஸ்.பி.எல் தொடர் தற்போது நடந்து முடிந்துள்ளது. முன்னதாக இந்த தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டியில் அபிசேக் பச்சனின் மும்பை அணியும் கரீனா கபூரின் கொல்கத்தா அணியும் மோதின. அபிசேக் பச்சன் நேரடியாக வந்து தனது அணிக்கு ஆதரவு அளித்தார். மேலும் அவருடன் அமிதாப் பச்சனும் வந்திருந்தார்.

இவரை அங்கு கண்டதால் ரசிகர்கள் வியப்படைந்தனர். முன்னதாக அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமிதாப் பச்சனுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் காலில் ஏற்பட்ட பிரச்சினைக்காக அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் அமிதாப் பச்சன் போட்டியை காண வந்தது அவரின் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அப்போது ரசிகர் ஒருவர் அவரிடம் எப்படி இருக்கிறீர்கள்? எல்லாம் நலமா? என்று கேட்கிறார். அதற்கு அமிதாப் பச்சன் ஆம் நலம், அது வதந்தி, என்று கூறுகிறார். இவ்வாறு கூறும் வீடியோ இணையத்தில் வெளியானது. இதன் மூலம் ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சை பற்றி பரவியது வதந்தி என்பது உறுதியாகி உள்ளது.

இதைப்போல வாழ்வில் பல உடல் நலபாதிப்புகளில் சிக்கி அதில் இருந்து வெற்றிகரமாக போராடி வென்று வந்தவர் அமிதாப் பச்சன்.

1982 -ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் சிக்கி அமிதாப் பச்சன் கோமா நிலைக்கு சென்றார். பின்னர் 2019 - ம் ஆண்டு உடல்நிலை பாதிப்பு காரணமாக அந்த ஆண்டு நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளவில்லை. மருத்துவர்கள் பயணம் மேற்கொள்ளக்கூடாது என்றதால் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவை தவறவிட்டார்.

அடுத்ததாக 2020 -ம் ஆண்டு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டார். பின்னர் 2023-ம் ஆண்டு படப்பிடிப்பின்போது வலது விலா எலும்பு பகுதியில் முறிவு ஏற்பட்டது. இதில் அனைத்திலும் இருந்து நல்ல படியாக குணமடைந்தார். இவ்வாறு வாழ்வில் பல உடல் உபாதைகளில் சிக்கி அதில் இருந்து வெற்றிகரமாக போராடி வென்று வந்துள்ளார் அமிதாப் பச்சன்.

அமிதாப் பச்சன் தற்போது பிரமாண்டமாய் உருவாகி வரும் கல்கி 2898ஏடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சயின்ஸ் பிக் ஷன் கலந்த பிரமாண்ட படமாக உருவாகி வருகிறது.

மேலும் செய்திகள்