அம்பானி இல்ல திருமண விழா: அமிதாப் பச்சன் காலில் விழுந்து ஆசி பெற்ற ரஜினிகாந்த்
|ஆனந்த் மற்றும் ராதிகா என இருவரின் திருமண கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாக இன்று மங்கள உத்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
மும்பை,
இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய மனைவி நீடா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி. இந்த தம்பதியின் மகனான ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் இடையேயான திருமணம் நேற்று முன்தினம் மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.
எனினும், திருமண நிகழ்ச்சி 3 நாட்களாக கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, இந்த திருமண நிகழ்ச்சி கொண்டாட்டங்கள் இன்று வரை மும்பையில் நடைபெறுகின்றன. இதனால், மும்பை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இதில் உள்ளூர் திரை பிரபலம் முதல் உலக பிரபலம் வரை பலரும் பங்கேற்று வருகின்றனர். பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் சர்வதேச அளவிலான முக்கிய பிரமுகர்களும் விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இதில், நேற்று சுப ஆசீர்வாத் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியில் ஷாருக் கான், கவுரி கான், சல்மான் கான், ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இந்திய திரையுலகில் இரு பெரும் உச்ச நட்சத்திரங்களாக அறியப்படும் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தங்களுடைய குடும்பத்தினருடன் இந்நிகழ்ச்சிக்கு வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியின்போது, அமிதாப் பச்சனை நோக்கி வந்த நடிகர் ரஜினிகாந்த், மரியாதைக்காக அவருடைய காலை தொட்டு வணங்கும் நோக்கத்துடன் சென்றார். எனினும், காலில் விழுவதற்கு முன் அவரை தடுத்து நிறுத்திய அமிதாப் பச்சன், அவரை அணைத்து கொண்டார்.
இதுபற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதற்கு முன், அமிதாப் பச்சனின் காலில் விழுந்து நடிகர் ஷாருக் கான் ஆசி பெற்றார். இந்த வீடியோவும் வைரலாக பரவி வருகின்றன.
இது, அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்துக்கு இடையேயான பரஸ்பர மரியாதை மற்றும் நட்புறவை காட்டுகிறது. 32 ஆண்டுகளுக்கு முன் இருவரும் கடைசியாக ஹம் என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அந்த படம் ஹிட்டானது. ரசிகர்களிடம் பலத்த வரவேற்பையும் பெற்றிருந்தது.
இந்நிலையில், அவர்கள் இருவரும் மீண்டும் வேட்டையன் படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர். இந்த படம் வருகிற அக்டோபரில் திரைக்கு வரவுள்ளது. இதற்காக அவர்கள் இருவரின் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். இந்த சூழலில், இருவரும் அம்பானி இல்ல திருமண விழாவில் ஒன்றாக இணைந்து காணப்பட்டது ரசிகர்களிடம் பரவசம் ஏற்படுத்தி உள்ளது.
ஆனந்த் மற்றும் ராதிகா என இருவரின் திருமண கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாக இன்று மங்கள உத்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.