< Back
சினிமா செய்திகள்
திருமணமான 2 மாதத்தில் அமலா பால் கர்ப்பம்: ஷாக் ஆன ரசிகர்கள்!!
சினிமா செய்திகள்

திருமணமான 2 மாதத்தில் அமலா பால் கர்ப்பம்: ஷாக் ஆன ரசிகர்கள்!!

தினத்தந்தி
|
4 Jan 2024 12:44 AM IST

தனது நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசாய் என்பவரை அமலாபால் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் 'வீரசேகரன்' என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அமலா பாலை, சர்ச்சை நாயகியாக மாற்றியது 'சிந்து சமவெளி' திரைப்படம். இதைத்தொடர்ந்து இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் அமலாபால் நடித்த 'மைனா' திரைப்படம் இவருடைய திரை உலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

மைனா' படத்தின் வெற்றிக்குப் பின்னர் கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக மாறிய அமலா பால், அடுத்தடுத்து சிறந்த கதைக்களம் கொண்ட படங்களையும், அழுத்தமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிக்க தொடங்கினார். பின்னர் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், நடிகர் விஜய் ஜோடியாக 'தலைவா' படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

தொடர்ந்து தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் முன்னணி இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த அமலா பால், 'தலைவா' மற்றும் 'தெய்வத்திருமகள்' படத்தில் நடிக்கும் போது இப்படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலிக்க துவங்கினார். ஏ.எல்.விஜய்யும் அமலா பாலை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்த நிலையில், அமலா பால் - ஏ.எல்.விஜய் திருமணம் கடந்த 2013 ஆம் ஆண்டு, இரு தரப்பு குடும்பத்தினர் சம்மதத்துடன், ஹிந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமலா பாலின் கதவை தட்டவே தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். இதுவே விஜய் - அமலாபால் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட காரணமாக அமைந்த நிலையில், திருமணம் ஆன நான்கு வருடத்தில், இருவரும் ஒருமித்த மனதுடன் விவாகரத்து பெற்று பிரிந்து சென்றனர்.

அமலாபாலை விவாகரத்து செய்த இரண்டே வருடத்தில், இயக்குனர் ஏ.எல்.விஜய் தன்னுடைய குடும்பத்தினர் விருப்பப்படி மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அமலாபால் திருமணம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி அமலா பாலின் பிறந்தநாள் அன்று தன்னுடைய காதலன் ஜெகத் தேசாய் புரோபோஸ் செய்த, புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட அவை படு வைரலானது. மேலும் தன்னுடைய காதலன் புரோபோஸ் செய்த ஒரே வாரத்தில் அமலா பால், ஜெகத் தேசாய் ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுடைய திருமணம் கொச்சியில் உள்ள நட்சத்திர விடுதிகள் மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்தது. குடும்பத்தினர் மட்டுமே இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டனர். மேலும் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியானது.

அமலாபால் ஜெகத் தேசாய் ஜோடிக்கு திருமணம் ஆகி இரண்டு மாதங்களே ஆகும் நிலையில், தற்போது அமலா பால் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூலம் அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் அமலா பாலுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்