'ஆடுஜீவிதம்' குறித்து அமலா பால் நெகிழ்ச்சி
|நடிகை அமலா பால் 'ஆடுஜீவிதம்' திரைப்படப் பயணம் குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
மைனா, வேட்டை, தலைவா, வேலையில்லா பட்டதாரி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அமலாபால். சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தபோது 2014-ல் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில மாதங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அவர் மீண்டும் நடிக்க தொடங்கினார்.
பின்னர் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017-ல் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன்பிறகு படங்களில் அவர் கவர்ச்சியாக நடிக்க தொடங்கினார். அதன் உச்சமாக ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்தார்.
இயக்குனர் விஜய் உடனான மண முறிவுக்குப் பிறகு, சினிமாவில் கவனம் செலுத்தி வந்த அவர், கடந்த ஆண்டு தனது நண்பர் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். கர்ப்ப காலத்தில் தனது மகிழ்ச்சி மற்றும் உடல்நலனைக் கருத்தில் கொண்டு யோகா செய்வது, தியானம் என அமைதியான முறையில் நாட்களை நகர்த்தி வந்தார்.
மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற 'ஆடுஜீவிதம்' நாவல் (தி கோட் லைப்) அதே பெயரில் திரைபடமாக எடுக்கப்பட்டுள்ளது. நாயகனாக பிருத்விராஜுன் நாயகியாக அமலா பாலும் நடித்துள்ளனர். பிளெஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக இப்படத்தின் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், வருகிற 28 -ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.
மலையாளத்திலிருந்து தமிழிலும் 'ஆடுஜீவிதம்' நாவல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கேரளத்திலிருந்து அரபு நாட்டுக்கு வயிற்றுப் பிழைப்புக்காகச் செல்லும் இருவர், அரேபியர்களிடம் மாட்டிக்கொண்டு ஆட்டுப் பட்டிகளில் ஆடுகளாகவே வாழ்ந்த துயரக் கதைதான் இந்த நாவலின் கதைக்கரு. 2010-ம் ஆண்டுக்கான கேரள சாகித்ய அகாடமி விருதினை இந்நாவல் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அமலா பால் தனது இன்ஸ்டாகிராமில், "2018-ல் தொடங்கிய நம்பமுடியாத பயணத்தினை பிரதிபலிக்கும் புகைப்படம். 2024-ம் ஆண்டிலும் தொடர்கிறது. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட நன்றியுடையவராக கருதுகிறேன்" எனக் கூறி 2018-ல் எடுத்த புகைப்படத்தினையும் 2024-ல் எடுத்த படத்தினையும் பதிவிட்டுள்ளார்.