புஷ்பா 2: அல்லு அர்ஜுனின் வேடம் பிரமிக்க வைக்கிறது - கடார் 2 பட டைரக்டர்
|நடிகர் அல்லு அர்ஜுன் கடார் 2 பட டைரக்டர் அனில் சர்மாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்
சென்னை,
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 இல் வெளியான படம் புஷ்பா தி ரைஸ். இந்த படம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட ரூ.400 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜுன், சுகுமார் கூட்டணியில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. புஷ்பா தி ரூல் (புஷ்பா 2) என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் டீசர் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. இந்நிலையில், இந்த டீசரை பார்த்த கடார் 2 பட டைரக்டர் அனில் சர்மா புஷ்பா 2 படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், நான் புஷ்பா 2 டீசரை பார்த்தேன். படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் வெளியாகி பெரிய வெற்றியைபெற்ற கடார் 2 படத்தைவிட புஷ்பா 2 மிகப்பெரிய வெற்றிபெறும். படக்குழுவிற்கும் ரசிகர்களுக்கும் வாழ்த்துகள். முக்கியமாக அல்லு அர்ஜுனுக்கு. இப்படத்தில் அவரின் வேடம் பிரமிக்கும் வகையில் மிகவும் அருமையாக உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த பதிவிற்கு நடிகர் அல்லு அர்ஜுன் பதில் அளித்து நன்றி தெரிவித்துள்ளார். அதில் அவர்,
எனது இதயபூர்வமான நன்றிகள் அனில் சார். உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வோம் என்று நம்புகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.