வயநாடு நிலச்சரிவு: நடிகர் அல்லு அர்ஜுன் ரூ. 25 லட்சம் நிதியுதவி
|சினிமா பிரபலங்கள் பலர் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
சென்னை,
கேரளாவில் பெய்து வந்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 359 ஆக உயர்வடைந்து உள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு துறை சார்ந்தவர்களும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். அண்மையில் நடிகர் விக்ரம், சூர்யா, ஜோதிகா, கார்த்தி உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்கள் கேரள முதல்-மந்திரியின் பேரிடர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கினர்.
இதேபோன்று, மலையாள திரையுலகை சேர்ந்த நடிகர் மம்முட்டி மற்றும் அவரது மகனான நடிகர் துல்கர் சல்மான் இணைந்து ரூ.35 லட்சம் நன்கொடை அளித்தனர். மேலும் பல சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் கேரள முதல்-மந்திரியின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்குவதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தற்போது மீட்பு பணியில், தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, போலீசார் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.