மத உணர்வை புண்படுத்தியதாக புகார் - அஜய்தேவ்கன் படத்துக்கு சிக்கல்
|மத உணர்வை புண்படுத்தியதாக புகார் எழுந்ததை தொடர்ந்து அஜய்தேவ்கன் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பிரபல இந்தி நடிகர் அஜய்தேவ்கன். இவர் தமிழில் சூர்யா நடித்து இந்தியில் ரீமேக் ஆன சிங்கம் படத்தில் நடித்து இருக்கிறார். இந்தி நடிகை கஜோலின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. அஜய்தேவ்கன் தற்போது இந்திரகுமார் இயக்கத்தில் 'தேங்க் காட்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் சித்தார்த் மல்கோத்ராவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். படத்தின் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அஜய்தேவ்கன், இயக்குனர் இந்திரகுமார், சித்தார்த் மல்கோத்ரா ஆகியோர் மீது ஜான்பூர் கோர்ட்டில் ஸ்ரீவஸ்தவா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் ''தேங்க் காட் படத்தின் டிரெய்லரில் மத உணர்வுக்கு எதிரான காட்சிகள் உள்ளன. அஜய்தேவ்கன் கோட் சூட் அணிந்து சித்ரகுப்தனாக நடிக்கும் காட்சியில் நகைச்சுவையாக ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். சித்ரகுப்தன் கர்மாவின் இறைவனாக கருதப்படுகிறார். எனவே அஜய்தேவ்கன் நடித்துள்ள காட்சி மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருக்கிறது" என்று குறிப்பிட்டு உள்ளார். இதனால் 'தேங்க் காட்' படத்துக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.